< Back
மாநில செய்திகள்
பாதாள சாக்கடை கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படுமா?
நாமக்கல்
மாநில செய்திகள்

பாதாள சாக்கடை கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படுமா?

தினத்தந்தி
|
23 April 2023 6:45 PM GMT

நாமக்கல் 21-வது வார்டில் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வுகான பாதாள சாக்கடை கால்வாய் திட்டம் நிறைவேற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

21-வது வார்டு

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 21-வது வார்டில் பூங்காநகர், போஸ்டல் நகர், இந்திராநகர், சரவணா நகர், போதுப்பட்டி (கிழக்கு), மயில்வாகணன்மேடு, சிவசக்திநகர், கொங்குநகர், குப்பம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த வார்டில் தலா ஒரு ரேஷன்கடையும், அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளது. இதுதவிர அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியும் உள்ளன.

இந்த வார்டு பெரியபட்டி, காவேட்டிப்பட்டி ஊராட்சிகளில் இருந்து நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியாகும். இதனால் இங்கு பாதாள சாக்கடை திட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. எனவே அங்கு கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்த வார்டில் 918 ஆண்கள், 901 பெண்கள், 1 இதரர் என மொத்தம் 1,820 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பாலசுப்பிரமணியம் வெற்றிபெற்றார். நகராட்சியின் பிற வார்டுகளை போல இந்த வார்டிலும் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும். சாலை வசதியை மேம்படுத்த வேண்டும். அடிப்படை வசதிகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பாதாள சாக்கடை திட்டம்

சரவணா நகர் பகுதியை சேர்ந்த செல்வம் கூறியதாவது:-

எங்களது வார்டு பெரியப்பட்டி மற்றும் காவேட்டிப்பட்டி ஊராட்சிகளில் இருந்து நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியாகும். எனவே இதுவரை பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் பாதாள சாக்கடை கால்வாய் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

இதேபோல் தார்சாலையாக மாற்ற வேண்டிய மண்சாலைகளும் அதிகம் உள்ளது. இவற்றை விரைவில் தார்சாலையாக மாற்ற வேண்டும். போதுப்பட்டி கருப்பண்ணார் கோவில் அருகில் இருந்து குப்பம்பாளையம் வரை மழைநீர் எளிதில் வெளியேறும் வகையில் கழிவுநீர் வாய்க்கால் அமைத்து தரவேண்டும். போதுப்பட்டியில் உள்ள குட்டையை தூர்வாரி, மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.

பொழுதுபோக்கு பூங்கா

போதுப்பட்டியை சேர்ந்த வசந்தி:-

சரவணாநகர், பூங்காநகர், ஓம்சக்திநகர், கருப்பண்ணார்கோவில் பின்புறம் என வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மின்விளக்கு வசதி இல்லை. எனவே மின்விளக்கு வசதி இல்லாத பகுதிகளுக்கு உடனடியாக மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். குப்பம்பாளையம் சுடுகாடு பகுதியில் முட்புதர்களை அகற்றி, தூய்மை படுத்த வேண்டும்.

எங்கள் பகுதியிலேயே சிறுவர், சிறுமிகள் விளையாட வசதியாக பொழுதுபோக்கு பூங்கா அமைக்க வேண்டும். மேலும் சிட்கோ காலனியில் இருந்து சிறுவர், சிறுமிகள் போதுப்பட்டி அரசு பள்ளிக்கு வருகிறார்கள். இவர்கள் காலை, மாலை நேரங்களில் பரமத்தி பிரதான சாலையை கடந்து செல்கிறார்கள். குறிப்பிட்ட நேரத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரை போதுப்பட்டி பிரிவு சாலையில் நிறுத்தி, அவர்கள் பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பம்பாளையத்தில் நத்தம் புறம்போக்கு பகுதியில் வசிக்கும் நபர்களுக்கு பட்டா வழங்க வருவாய்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

என்ன சொல்கிறார் கவுன்சிலர்?

இது குறித்து 21-வது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:-

நான் அடிக்கடி பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உடனுக்குடன் நிவர்த்தி செய்து வருகிறேன். நான் பொறுப்பேற்ற பிறகு போதுப்பட்டி நடுவீதியில் பழுதான தரைபாலத்தை சீரமைத்து கொடுத்து உள்ளேன். இதேபோல் போதுப்பட்டி மாரியம்மன் கோவில் முதல் பரமத்திரோடு வரை சாலையை அகலப்படுத்தி கொடுத்து உள்ளேன். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதுடன், இப்பகுதி மக்களின் 25 ஆண்டுகால கோரிக்கையையும் நிறைவேற்றி கொடுத்து உள்ளேன்.

குப்பம்பாளையம் பகுதியில் பழுதான 5 மின்கம்பங்களை மாற்றி கொடுத்து உள்ளேன். குப்பம்பாளையம் பகுதியில் பல ஆண்டுகளாக இருந்த கழிப்பிட பிரச்சினையை தீர்க்கும் வகையில், ஆண், பெண்களுக்கு தனித்தனியாக ரூ.24 லட்சத்து 80 ஆயிரம் செலவில் நவீன கழிப்பிடம் கட்டி கொடுத்து உள்ளேன். தற்போது தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் அப்பகுதியில் கழிவுநீர் தேங்காமல் அப்புறப்படுத்த ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. போதுப்பட்டியில் நகர்புற நல்வாழ்வு மையம் ரூ.25 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. விரைவில் அது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

போதுப்பட்டியில் ஏற்கனவே இருந்த பெண் கழிப்பிடத்தை பராமரிப்பு செய்து புதிய மின்மோட்டார் பொருத்தி, தண்ணீர் வசதி செய்து கொடுத்து உள்ளேன். இதேபோல் ஓம்சக்தி நகர், கொங்குநகர், குப்பம்பாளையம் சுடுகாடு பகுதியில் தார்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மண் சாலைகளை தார்சாலையாக மாற்றவும், குட்டையை தூர்வாரவும், பூங்கா அமைக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறேன். பாதாள சாக்கடையை பொறுத்த வரையில் விரைவில் அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். அப்போது கழிவுநீர் பிரச்சினைக்கு முடிவு வரும். தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி., ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வழிகாட்டுதல்படி எனது வார்டை நகராட்சியின் முன்மாதிரி வார்டாக மாற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

வார்டு மக்களுக்கு வேண்டியவை

1. தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.

2. அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை வசதி.

3. சிறுவர், சிறுமிகள் விளையாட பொழுதுபோக்கு பூங்கா.

4. குட்டையை தூர்வாரி பராமரிக்க வேண்டும்.

5. மண்சாலைகள் தார்சாலைகளாக மாற்றப்பட வேண்டும்.

6. அனைத்து பகுதிகளுக்கும் தெருவிளக்கு வசதி.

மேலும் செய்திகள்