< Back
மாநில செய்திகள்
இது நம்ம வார்டு-13குட்டைதெருவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா?
நாமக்கல்
மாநில செய்திகள்

இது நம்ம வார்டு-13குட்டைதெருவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா?

தினத்தந்தி
|
5 March 2023 6:45 PM GMT

நாமக்கல் நகராட்சி 13-வது வார்டில் விடுபட்ட பகுதியான குட்டை தெருவில் பாதாள சாக்கடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

13-வது வார்டு

நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 13-வது வார்டில் மஜித்தெரு, அஜீஸ்தெரு, ராஜாஜி பள்ளிதெரு, குட்டைதெரு, பாவடிதெரு, மருதமுத்து தெரு, பிடில்முத்து தெரு, சாமியப்பா காலனி, எம்.ஜி.ஆர். நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, எம்.ஜி.ஆர். நகர், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த வார்டில் தான் நாமக்கல் ரெயில் நிலையம் உள்ளது. மேலும் இங்கு 2 ரேஷன்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த வார்டு பழைய நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருப்பதால், பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமலில் இருந்து வருகிறது. இதனால் கழிவுநீர் பிரச்சினை பெரிய அளவில் இல்லை. இந்த வார்டில் 1,452 ஆண்கள், 1,696 பெண்கள் என மொத்தம் 3,148 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பர்கத் துனிஷா வெற்றிபெற்றார்.

இந்த வார்டுக்கு உட்பட்ட குட்டை மேலத்தெருவில் போதிய வடிகால் வசதி மற்றும் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் சிறு மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்குகிறது. எனவே விடுப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். போதிய வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக இருந்து வருகிறது. மேலும் மற்ற வார்டுகளை போன்று இந்த வார்டிலும் சாலைவசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது.

மினிபஸ் வசதி

இது குறித்து எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த பார்த்திபன் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் இருந்து சேந்தமங்கலம் சாலை வருவதற்கு சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மீண்டும் மினி பஸ் போக்குவரத்து செயல்படுத்த வேண்டும்.

மேலும் ரேஷன் கடைக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க 2 கி.மீட்டர் செல்ல வேண்டி இருப்பதால், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் பகுதிநேர ரேஷன்கடை ஒன்றை ஏற்படுத்தி தர வேண்டும். எங்கள் பகுதியில் போதிய மழைநீர் வடிகால் அமைக்க வேண்டும். சமுதாய கூடம் அமைத்து தர வேண்டும்.

பாதாள சாக்கடை வசதி

குட்டைதெருவை சேர்ந்த கோபிநாத்:-

குட்டைதெருவில் மழைக்காலங்களில் எளிதில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விடுவதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே எங்கள் பகுதிக்கு பாதாள சாக்கடை வசதி மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். எங்கள் வார்டு மக்கள் அனைவரும் எங்கள் பகுதிக்கு தான் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வர வேண்டும். மழைக்காலங்களில் இது சிரமமாக இருந்து வருகிறது.

இதேபோல் சேந்தமங்கலம் சாலையில் இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. இந்த தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

என்ன சொல்கிறார் கவுன்சிலர்

இது குறித்து 13-வது வார்டு கவுன்சிலர் பர்கத்துனிஷா கூறியதாவது:-

நான் பொறுப்பேற்றது முதல் அடிக்கடி பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறேன். முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தில் உருது தொடக்கப்பள்ளியை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டேன்.

எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் ரூ.24 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பிடம் கட்டி கொடுத்து உள்ளேன். 6 மின்கம்பங்களை மாற்றி அமைக்கவும், 37 இடங்களில் எல்.இ.டி.பல்பு பொருத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளேன். மருதமுத்து தெரு, குட்டை தெரு பகுதிகளில் பொது கிணறுகளில் சாக்கடை நீர் கலக்காமல் தடுப்புசுவர் அமைக்கவும், அனைத்து பகுதிகளிலும் பழுதான சாலையை சீரமைக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.

நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. அப்போது எனது வார்டுக்கு உட்பட்ட விடுபட்ட குட்டை தெருவிலும் பாதாள சாக்கடை திட்டம் மழைநீர் வடிகால் வசதி செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வார்டு மக்களுக்கு வேண்டியவை

1. ரேஷன்கடைக்கு நிரந்தர கட்டிடம் கட்டி தர வேண்டும்.

2. எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் சமுதாய கூடம் கட்ட வேண்டும்.

3. குட்டை தெருவில் வடிகால் வசதி, பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

4. தெருநாய்களை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும்.

5. பழுதான சாலைகளை புதுப்பிக்க வேண்டும்.

6. கொசு தொல்லை இருக்க கூடாது.

மேலும் செய்திகள்