நாமக்கல்
பாதாள சாக்கடை திட்டம் விடுபட்ட பகுதிகளில் நிறைவேற்றப்படுமா?
|நாமக்கல் நகராட்சி 11-வது வார்டில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
11-வது வார்டு
நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 11-வது வார்டில் ராமாபுரம்புதூர் சாவடிதெரு, ராமாபுரம்புதூர் காலனி, அன்புநகர் திட்டம்-3, செம்பாளிக்கரடு, எழில்நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கி உள்ளன. இந்த வார்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி, 2 ரேஷன்கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த வார்டு பழைய நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்தாலும் சுமார் 40 சதவீத வீடுகள் இன்னும் பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்கப்படவில்லை. இதனால் ஆங்காங்கே கழிவுநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த வார்டில் 1,483 ஆண்கள், 1,488 பெண்கள் என மொத்தம் 2,971 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பூபதி வெற்றிபெற்றார். இவர் தி.மு.க.வின் கிழக்கு நகர செயலாளராகவும், நகராட்சி துணை தலைவராகவும் திறம்பட செயலாற்றி வருகிறார்.
மற்ற வார்டுகளை போன்று இந்த வார்டிலும் சாலைவசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும் என்கிற கோரிக்கை இருந்து வருகிறது.
பாதாள சாக்கடை திட்டம்
இது குறித்து ராமாபுரம்புதூர் காலனியை சேர்ந்த பாஸ்கர் கூறியதாவது:-
நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட பழைய வார்டுகளில் பெரும்பாலான பகுதிகளில் பாதாள சாக்கடை வசதி உள்ளது. ஆனால் 11-வது வார்டில் சுமார் 40 சதவீத வீடுகளுக்கு இன்னும் பாதாள சாக்கடை வசதி இல்லை. எனவே வீடுகளுக்கு முன்பு கழிவுநீரை விடும் அவலம் இருந்து வருகிறது. எனவே விடுப்பட்ட பகுதிகளில் விரைவில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்றி தர வேண்டும்.
ராமாபுரம்புதூர் காலனியில் பொதுகிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ளது. இதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ராமாபுரம்புதூர் பகுதிக்கு குடிநீர் குறைந்த அளவே வருகிறது. எனவே குடிநீரின் வேகத்தை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
100 குடும்பங்களுக்கு பட்டா
செம்பாளிக்கரடு பகுதியை சேர்ந்த தங்காயி:-
செம்பாளிக்கரடு மற்றும் ராமாபுரம்புதூர் காலனியில் வசிக்கும் சுமார் 100 குடும்பங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. எனவே விரைவில் பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். செம்பாளிக்கரடு பகுதிக்கு குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் வார்டு முழுவதும் தெருநாய்கள் தொல்லை இருந்து வருகிறது. இந்த தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்ன சொல்கிறார் கவுன்சிலர்?
இது குறித்து 11-வது வார்டு கவுன்சிலர் பூபதி கூறியதாவது:-
நான் பொறுப்பேற்ற பிறகு ராமாபுரம்புதூர் பிரதான சாலை, 4 தியேட்டர் முதல் ஆர்.பி.புதூர் சாலை, எழில்நகர் மற்றும் அன்புநகர் பகுதிகளில் சாலை புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் சக்கரத்தாழ்வார் கோவில், சாவடிதெரு, அன்புநகர் பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி கொடுத்து உள்ளேன். அன்புநகர் திட்டம்-3 பகுதியில் உயர்மின் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. ராமாபுரம்புதூர் பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ராமாபுரம்புதூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.8 லட்சம் செலவில் விரைவில் மராமத்து பணி தொடங்க இருக்கிறது. ஆர்.பி.புதூர் பகுதியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10 லட்சம் செலவில் சாக்கடை வடிகால் வசதி செய்யப்பட்டு உள்ளது. ராமாபுரம்புதூர் காலனியில் 6 மின்கம்பங்களை மாற்றி அமைத்து கொடுத்து உள்ளேன். நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்த ராமாபுரம்புதூர் காலனியில் உள்ள சமுதாய கூடம் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதேபோல் 5 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டி கிடந்த கழிப்பிடம் மராமத்து பணிகள் செய்யப்பட்டு, திறக்கப்பட்டு உள்ளது.
அன்புநகரில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.37 லட்சம் செலவில் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. புதிதாக நகராட்சியுடன் இணைக்கப்பட்ட 9 ஊராட்சி பகுதிகளிலும் விரைவில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதோடு சேர்த்து 11-வது வார்டில் விடுபட்ட பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். அப்போது கழிவுநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்கு எல்.இ.டி. விளக்குகளாக மாற்றப்பட உள்ளன. இதேபோல் விளக்குகள் இல்லாத கம்பங்களிலும் எல்.இ.டி. விளக்கு பொருத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வார்டு மக்களுக்கு வேண்டியவை
1. விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
2. பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3. அனைத்து பகுதிகளிலும் தெருவிளக்குகள் எரிய வேண்டும்.
4. தெருநாய்கள் தொல்லை இருக்கக்கூடாது.
5. அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும்.
6. கொசு தொல்லை இருக்க கூடாது.