நாமக்கல்
பாதாள சாக்கடை திட்டம் நிறைவேறுமா?
|நாமக்கல் நகராட்சி ௧-வது வார்டில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
39 வார்டுகள்
நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 1-வது வார்டில் மாவட்ட கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ஒருங்கிணைந்த கோர்ட்டு உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் அமைந்து உள்ளன. அய்யம்பாளையம், கருப்பட்டிபாளையம், உத்தமபாளையம், எஸ்.பி.கே.நகர் உள்ளிட்டவை இந்த வார்டில் இடம் பெற்றுள்ள முக்கிய பகுதியாகும். இதுதவிர சிலுவம்பட்டி, நல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் இந்த வார்டில் அமைந்து உள்ளன.
மேலும் அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகின்றன. இந்த வார்டில் சுமார் 3,500 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் 1,875 பேர் வாக்காளர்களாக உள்ளனர். இங்கு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சத்தியவதி வெற்றிபெற்றார்.
இந்த வார்டில் கழிவுநீர் பிரச்சினை முக்கிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால் கொசு தொல்லையும் அதிகமாக இருந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள அய்யம்பாளையம் குளத்தில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதுதவிர சாலை வசதி, தெருவிளக்கு வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தர வேண்டும். என்கிற கோரிக்கையும் இருந்து வருகிறது.
நாமக்கல் நகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட 9 ஊராட்சிகளை தவிர இதர பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பதே கோரிக்கை ஆகும்.
வீட்டுமனை பட்டா
இது குறித்து உத்தமபாளையம் அருந்தியர் காலனியை சேர்ந்த குமாரசாமி கூறியதாவது :-
எங்கள் பகுதியில் 120 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் விடுபட்டு உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா இல்லாத காரணத்தால் மின்இணைப்பு வாங்க முடியவில்லை. எனவே இந்த நவீன காலத்திலும் எங்களது குழந்தைகள் தெருவிளக்கு வெளிச்சத்தில் தான் படிக்க வேண்டிய நிலை உள்ளது.
இதேபோல் பட்டா இல்லாததால் காவிரி குடிநீர் இணைப்பும் பெற முடியவில்லை. எனவே குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே எங்களுக்கு பட்டா வழங்கி அடிப்படை வசதிகளையும், பாதாள சாக்கடை திட்டத்தையும் நிறைவேற்றி தரவேண்டும்.
கூடுதல் பஸ் இயக்க வேண்டும்
கருப்பட்டிபாளையம் அருந்ததியர் காலனி பழனியம்மாள்:-
எங்கள் பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஜல்ஜீவன் திட்டத்தில் வீடு, வீடாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் எங்கள் பகுதி மேடான பகுதியாக இருப்பதால் மிகவும் குறைவான குடிநீரே கிடைத்து வருகிறது. எனவே அன்றாட தேவைக்கு குடிநீர் கிடைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கழிப்பிட வசதி இல்லாமல் பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொது கழிப்பிடம் ஏற்படுத்தி தர வேண்டும். எங்கள் பகுதிக்கு ஒரே ஒரு டவுன்பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் கூலி வேலைக்கு செல்லும் பெண் மற்றும் ஆண்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் இருந்து நடந்தே வரும் அவலநிலை இருந்து வருகிறது. இதேபோல் பள்ளி மாணவ, மாணவிகளும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
என்ன சொல்கிறார் கவுன்சிலர் சத்தியவதி:-
நான் தினமும் வார்டு பகுதிகளை பார்வையிட்டு மக்களின் கோரிக்கைகளை அறிந்து நிறைவேற்றி வருகிறேன். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து அய்யம்பாளையம், மகஷிரி நகர், எஸ்.பி.கே.நகர் பகுதிகளில் புதிதாக தார்சாலை அமைத்து கொடுத்து உள்ளேன். கருப்பட்டிபாளையம் குளம் தூர்வாரப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்து உள்ளது. அய்யம்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நிலவும் கழிவுநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரைவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறேன்.
கருப்பட்டிபாளையம் பகுதியில் போதிய பஸ்வசதி இல்லை. ஷேர் ஆட்டோவும் அப்பகுதியில் இயக்கப்படாத காரணத்தால் கூடுதல் பஸ் இயக்குவதற்கு போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து உள்ளேன். மேலும் எனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் 9 இடங்களில் பூங்காவிற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வார்டில் விரைவில் பூங்கா அமைத்து கொடுக்க பாடுவேன். அய்யம்பாளையம் பால்கூட்டுறவு சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கும், உத்தமபாளையம் மற்றும் கருப்பட்டிபாளையம் பகுதியை சேர்ந்த அருந்ததியர் காலனியில் வசிக்கும் 250 பேருக்கு பட்டா வாங்கி கொடுக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறேன்.
வார்டு மக்களுக்கு வேண்டியவை
1. கழிவுநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க பாதாள சாக்கடை திட்டம்
2. பொழுதுபோக்கு பூங்கா, நடைபயிற்சிக்கான இடம்
3. கொசுத்தொல்லை இருக்க கூடாது
4. சுகாதாரம் பேணப்பட கால்வாய் வசதி
5. அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டா.
6. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கோழிக்கழிவுகள் கொட்டுவதை முழுமையாக தடுக்க வேண்டும்.