நாமக்கல்
பாதாள சாக்கடை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படுமா?
|கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாமக்கல் நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 9 ஊராட்சி பகுதிகளில் விரைவில் பாதாள சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
9 ஊராட்சிகள் இணைப்பு
நாமக்கல் நகராட்சி 30 வார்டுகளை கொண்டதாக இருந்தது. கடந்த 2011-ம் ஆண்டு நகராட்சியை ஒட்டி உள்ள அய்யம்பாளையம், நல்லிபாளையம், காவேட்டிப்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, முதலைப்பட்டி, கொசவம்பட்டி, தும்மங்குறிச்சி, பெரியப்பட்டி, சின்னமுதலைப்பட்டி என 9 ஊராட்சிகள் இந்த நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதனால் தற்போது நகராட்சியில் வார்டுகளின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து உள்ளது.
9 ஊராட்சிகள் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆன நிலையிலும், பழைய நகராட்சி பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் இன்னும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு கிடைக்கவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. இந்த பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வந்த நிலையில் ஜேடர்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் ஓரளவு தீர்வு காணப்பட்டு உள்ளது.
பாதாள சாக்கடை
பழைய நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இதன்படி 18 வார்டு பகுதிகளில் மொத்தம் 74 கி.மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு, தினசரி 5 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, வெளியேற்றப்பட்டு வருகிறது. மீதமுள்ள 21 வார்டு பகுதிகளில் 325 கி.மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை அமைக்கவும், நாள் ஒன்றுக்கு 11 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்ய ஏதுவாக கூடுதல் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், திட்டம் தீட்டப்பட்டு, நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக புதிதாக இணைக்கப்பட்ட நல்லிபாளையம், பெரியஅய்யம்பாளையம், சின்ன அய்யம்பாளையம், பாரதிதாசன்நகர், கருப்பட்டிபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் பிரச்சினை அதிக அளவில் உள்ளது. ஆங்காங்கே மழைநீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. கொசு தொல்லையும் அதிக அளவில் இருந்து வருகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு வருகிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
சுகாதார சீர்கேடு
இது குறித்து நல்லிபாளையத்தை சேர்ந்த சுந்தரவடிவேல் கூறியதாவது:-
நல்லிபாளையம் நீர்நிலைகள் அதிகம் கொண்ட பகுதியாகும். இங்கு பாதாள சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீர் நீர்நிலைகளில் கலந்து மாசு ஏற்படுத்தி வருகின்றது. இதனால் கொசு தொல்லை அதிகரித்து உள்ளது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டு வருகிறது. கழிவுநீர் ஆங்காங்கே மழைநீருடன் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய் ஏற்பட்டு அவதி அடைந்து வருகின்றனர்.
கடந்த காலத்தில் மழைநீர் சென்ற சில ஓடைகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு விட்டன. மேலும் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது போதிய வடிகால் வசதி செய்யவில்லை. இதன் விளைவாக ஆங்காங்கே சாலையோரங்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும் விரைவாக பாதாள சாக்கடை அமைக்க வேண்டும்.
நீர்நிலைகள் சீரமைப்பு
பெரிய அய்யம்பாளையத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்:-
பெரிய அய்யம்பாளையம் அருகே உள்ள மணக்காட்டு குட்டையில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் அதிக அளவில் நிரம்பி உள்ளது. இந்த தண்ணீருடன் கழிவுநீரும் கலப்பதால், பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதேபோல் சில இடங்களில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் தெருக்களில் பாய்ந்து ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மழைநீர் செல்லும் வாய்க்காலில் கழிவுநீரை விடுவதே இதற்கு முக்கிய காரணம் ஆகும். எனவே காசான்குளம், நாவிதன் குளம் போன்ற நீர்நிலைகளை சீரமைத்து மழைநீர் எளிதில் செல்வதற்கு அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நாமக்கல் நகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட 9 ஊராட்சி பகுதிகளிலும் விரைவாக பாதாள சாக்கடை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரூ.303 கோடிக்கு ஒப்புதல்
இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2022-23-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.303 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான நிதி விரைவில் ஒதுக்கீடு செய்து, டெண்டர் விடப்பட்டு பணிகள் தொடங்கும் என்றனர்.