< Back
மாநில செய்திகள்
சமூக நலத்துறையின் கீழ், ஈரோடு மாவட்டத்தில்67 திருநங்கைகளுக்கு தலா ரூ.1,500 ஓய்வூதியம்நிதி உதவி பெற்றவர்கள் மகிழ்ச்சி
ஈரோடு
மாநில செய்திகள்

சமூக நலத்துறையின் கீழ், ஈரோடு மாவட்டத்தில்67 திருநங்கைகளுக்கு தலா ரூ.1,500 ஓய்வூதியம்நிதி உதவி பெற்றவர்கள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
12 May 2023 3:13 AM IST

67 திருநங்கைகள் தலா ரூ.1,500 ஓய்வூதியம் நிதி உதவி பெற்றதால் மகிழ்ச்சி அடைந்தனா்

சமூக நலத்துறையின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 67 திருநங்கைகள் ரூ.1,500 ஓய்வூதியம் பெற்று வருகிறார்கள். அரசின் நிதி உதவியை பெற்ற அவர்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

ஓய்வூதியம் ரூ.1,500

தமிழ்நாட்டில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு மாதம் தோறும் தமிழக அரசால் ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அந்த தொகையை ரூ.1,500 ஆக உயர்த்தி முதல்-அமைச்சர் உத்தரவிட்டதுடன், கடந்த மார்ச் மாதம் முதல் திருநங்கைகளுக்கு தலா ரூ.1,500 வழங்கி தொடங்கி வைத்தார்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் திருநங்கைகளுக்கும் அரசின் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் 200 திருநங்கைகள் கண்டறியப்பட்டு, 191 பேருக்கு இதுவரை அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது.

67 திருநங்கைகள்

இதில் 40 வயதுக்கு மேற்பட்ட 67 திருநங்கைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் தலா ரூ.1,500 வழங்கப்பட்டு வருகிறது. இது திருநங்கைகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து நசியனூர் பகுதியை சேர்ந்த திருநங்கை செல்வி (வயது 56) கூறியதாவது:-

திருநங்கையான எனக்கு தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளாக ரூ.1000 மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கி வருகிறது. தொடக்கத்தில் இது போதுமானதாக இருந்தது. ஆனால், 3 ஆண்டுகளுக்கு முன்பு சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு மருந்து மாத்திரை வாங்க இந்த தொகை போதுமானதாக இல்லை. இதனால் மிகவும் சிரமப்பட்டேன். இந்தநிலையில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கான ஓய்வூதிய தொகை ரூ.1,500 என அறிவித்து வழங்கி வருவதால் ஓரளவு சமாளித்து வருகிறேன். சமூகத்தில் ஒதுக்கப்படும் எங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்குநன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மகிழ்ச்சி

பவானி மைலம்பாடியை சேர்ந்த திருநங்கை ஜான்சி (50) கூறியதாவது:-

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறை மூலம் எனக்கு தலா ரூ.1000 ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இந்த தொகை தற்போது ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டு இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால் எனது செலவுகளை என்னால் முழுமையாக சமாளித்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். ஓய்வூதியம் உயர்த்தி தந்த தமிழக அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றியை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்