< Back
மாநில செய்திகள்
பிரயாஸ் திட்டத்தின் கீழ் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வுபெற்ற நாளிலேயே ஓய்வூதியம் பெற ஆணை
சென்னை
மாநில செய்திகள்

'பிரயாஸ்' திட்டத்தின் கீழ் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வுபெற்ற நாளிலேயே ஓய்வூதியம் பெற ஆணை

தினத்தந்தி
|
2 Aug 2023 1:08 PM IST

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வுபெற்ற நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அதிகாரிகள் வழங்கினர்.

சென்னை,

மத்திய அரசு 'பிரயாஸ்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் 1995-ல் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், அம்பத்தூர் மண்டல தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் சார்பில் சென்னை பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தில் 'பிரயாஸ்' திட்டத்தின் கீழ் ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பிரேக்ஸ் இந்தியா, எம்பி டிஸ்டில்லரீஸ், எஸ்.பி.ஐ.ஓ.ஏ. கல்வி அறக்கட்டளை, அய்யப்பா எண்டர்பிரைசஸ், லூகாஸ்-டி.வி.எஸ்., வீல்ஸ் இந்தியா, வில்கார், ஸ்ரீ வெங்கடேஸ்வரா என்ஜினீயரிங் கல்லூரி, கோஸ்டெல் ஸ்டீல்ஸ், என்ரிகா என்டர்பிரைசஸ், கோன் எலவேட்டர் இந்தியா, ஏ.வி.ஏ. சோலையில் ஹெல்த்கேர், அமால்கமேசன் ரெப்கோ நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த பணியாளர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதியின் மத்திய அறங்காவலர் குழு உறுப்பினர் கே.இ.ரகுநாதன், சென்னை மற்றும் புதுச்சேரி மண்டல கூடுதல் மத்திய வைப்பு நிதி கமிஷனர் பங்கஜ் ஆகியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்கள். அப்போது அம்பத்தூர் மண்டல வைப்பு நிதி கமிஷனர்-1 ஜி.ஆர்.சுசிந்த்ரநாத் உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பிரயாஸ் திட்டத்தின் கீழ் ஓய்வூதிய ஆணைகளை பெற விரும்பும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அங்கம் வகிப்பவர்கள் ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பே தங்களது மண்டல வைப்பு நிதி அலுவலகத்தை அணுகி இந்த சேவையை பெறலாம் என்று அம்பத்தூர் மண்டல வைப்பு நிதி கமிஷனர்-1 ஜி.ஆர்.சுசிந்த்ரநாத் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்