பெரம்பலூர்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சமரசமின்றி நடவடிக்கை-மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு பேட்டி
|பெரம்பலூரில் இந்த ஆண்டு 48 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எவ்வித சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
போலீஸ் அதிகாரிகள் மாநாடு
சென்னையில் கடந்த 3-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் மாநாடு நடைபெற்றது. இதில், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியும் கலந்து கொண்டார். போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதல்-அமைச்சர் கூறிய கருத்துகள் குறித்து 'தினத்தந்தி' நாளிதழ் சார்பில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- பெரம்பலூர் மாவட்டத்தில் கொலை, ரவுடிசம் அதிகரித்துள்ளதா?
பதில்:- போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தை சுட்டிக்காட்டி குறைகள் ஏதும் தமிழக முதல்-அமைச்சர் தெரிவிக்கவில்லை. மாநாட்டில் முதல்-அமைச்சர் கூறியது போல் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் முன்னதாகவே கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது மாவட்டத்தில் கொலை, ரவுடிசம் குறைந்துள்ளது.
மாவட்டத்தில் அதிகமாக நடைபெற்று வந்த சங்கிலி பறிப்பு, திருட்டு தற்போது குறைந்துள்ளது. அந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். திருட்டில் ஈடுபட்டு தப்பி சென்ற குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளன.
சாலை விபத்துகள்
கேள்வி:- சாலை விபத்துகளை குறைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
பதில்:- மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாலை விபத்துகள் பாதியாக குறைந்துள்ளது. சாலை விபத்துகளை குறைக்க போலீசார் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். சாலை போக்குவரத்து விதிகள் குறித்து போலீசார் மூலம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படும் 18 இடங்களும், ஊரக பகுதிகளில் உள்ள சாலை விபத்து ஏற்படும் 73 இடங்களும் கண்டறியப்பட்டு, அந்த இடங்களில் சாலை போக்குவரத்து தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் விபத்துகள் குறைந்துள்ளன.
கேள்வி:- வாகன ஓட்டிகள் இரவில் ஓய்வு எடுக்க இடம் ஏதேனும் தேர்வு செய்யப்பட்டுள்ளதா?
பதில்:- டிரைவர்கள் இரவு, நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் தூக்கமில்லாமலும், ஓய்வில்லாமலும் வாகனம் ஓட்டுவதால் சாலை விபத்துகள் ஏற்படுவதால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திருவளக்குறிச்சி பிரிவு சாலை அருகே வாகன ஓட்டிகள், வாகனங்களில் வரும் பயணிகள் ஓய்வு எடுக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தேநீர், உணவகம் மற்றும் கழிவறை, புறக்காவல் நிலையம் வசதியுடன் விரைவில் ஓய்வுக்கூடம் அமைக்கப்படவுள்ளது.
போக்சோ வழக்குகள்
கேள்வி:- போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறதா?
பதில்:- சாராயம், போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சாராயம் விற்பவர்கள், தயாரிப்பவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 27 கஞ்சா வழக்குகள் பதியப்பட்டு, அதில் இருசக்கர வாகனங்கள் 3, நான்கு சக்கர வாகனங்கள் 2, மூன்று சக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சாராயம், போதை பொருட்களினால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளிடம் தொடர்ந்து போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கேள்வி:- இந்த ஆண்டு இதுவரை எவ்வளவு போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன?. இதில் யாருக்கேனும் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளதா?.
பதில்:- பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் எவ்வித சமரசமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பதியப்பட்ட 48 போக்சோ வழக்குகளில், ஒரு வழக்குக்கு கோர்ட்டில் தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பள்ளி, கல்லூரிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், ஒவ்வொரு கிராமத்திலும் போலீசார் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கேள்வி:- மாவட்டத்தில் சமூக ஊடகங்கள் கண்காணிக்கப்படுகிறதா?
பதில்:- சமூக ஊடகங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலீஸ் நிலையங்களில் வரவேற்பாளர் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் புகார் கொடுக்கும் மனுதாரர்களின் கனிவுடன் அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து மேல் நடவடிக்கை எடுக்க உதவி புரிந்து வருகின்றனர். நிலுவையில் உள்ள பிடியாணைகளில் இந்த ஆண்டு 199 பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சாதி, மத கலவரங்களுக்கு இடம் அளிக்க கூடாது என்ற வகையில் போலீசார் தங்களது பணியை செய்து வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால் பொதுமக்களை போலீசார் நேரில் சந்தித்து பிரச்சினைகள் கேட்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்வியும்-காவலும் திட்டம்
கேள்வி:- "கல்வியும்-காவலும்" என்ற திட்டத்தை போன்று வேறு ஏதேனும் திட்டம் செயல்படுத்தப்படுகிறதா?
பதில்:- மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காவல்துறை குறித்து தெரிந்து கொள்ள "கல்வியும்-காவலும்" என்ற திட்டம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தோறும் போலீஸ் நிலையங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கிராம பொதுமக்களுக்கு "கிராம காவல்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் நட்புறவை வளர்க்கும் வகையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் "ஹேப்பி சண்டே" என்ற கொண்டாட்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. போலீசாருக்கு "காபி வித் கான்ஸ்டபிள்" என்ற நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன் மூலம் போலீசாரின் மனநிலை தெரிந்து கொள்ளவும், அவர்களின் ஆலோசனைகளும் கேட்டு கொள்ள முடிகிறது.
வாரந்தோறும் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் நடைபெறும் போலீசாரின் சிறப்பு மனு விசாரணை முகாமில் கொடுக்கப்படும் பொதுமக்களின் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் நில பிரச்சினைகளை தீர்க்க தாலுகா வாரியாக வருவாய்த்துறையினருடன் இணைந்து சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் எந்தவித பிரச்சினைகள் என்றாலும் பொதுமக்கள் மாவட்ட போலீஸ் அலுவலகத்தின் 9498100690 என்ற செல்போன் எண்ணை 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம்.
45 பவுன் நகைகள் மீட்பு
கேள்வி:- மாவட்டத்தில் இந்த ஆண்டு கொள்ளை, வழிப்பறி சம்பவம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்?
பதில்:- இந்த ஆண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகளில் இதுவரை பதிவு செய்யப்பட்ட 43 வழக்குகளில், 18 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.21 லட்சத்து 73 ஆயிரத்து 740 மதிப்புள்ள சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதில் 45 பவுன் நகைகளாகவும், ரூ.13 லட்சத்து 68 ஆயிரத்து 940 பணமாகவும், 11 இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் குற்றங்கள் நடக்காத வண்ணம் இரவு ரோந்து போலீசாரை நியமித்தும், பெரம்பலூர் காவல் நிலைய சரகத்தில் 24 மணி நேரமும் 3 தனிப்படைகள் வீதம் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.