< Back
மாநில செய்திகள்
கூடுவாஞ்சேரி அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கூடுவாஞ்சேரி அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை

தினத்தந்தி
|
14 July 2023 2:20 PM IST

கூடுவாஞ்சேரி அருகே கடன் தொல்லையால் தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

இறந்து கிடந்தனர்

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி, ஜெயராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் கருத்தோவியன் (வயது 62). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (53), இவர்கள் இருவரும் தனியாக அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவரது 2 மகன்கள் அதே பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்குவதற்காக சென்ற கருத்தோவியன், மஞ்சுளா இருவரும் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்க வில்லை. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகம் அடைந்து அதே பகுதியில் உள்ள அவர்களது மகன்களுக்கு தகவல் தெரிவித்தனர்.உடனடியாக வீட்டுக்கு வந்த அவர்கள் கதவை தட்டி பார்த்தனர். கதவு திறக்கப்படாததால் இதுகுறித்து அவர்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் கருத்தோவியன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகவும், அவரது மனைவி படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தார்.

கடன் தொல்லையால்

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது 2 மகன்கள், உறவினர்கள் கதறி அழுதனர். இதையடுத்து கருத்தோவியன், மஞ்சுளா ஆகியோரின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது கருத்தோவியன் இருதய நோய் அவரது மனைவி நீரிழிவு நோய் பிரச்சினையால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

மேலும் கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் நீண்ட காலமாகவே இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்ததும் தெரியவந்தது. மேலும் கருத்தோவியன் தூக்குப்போட்டும், அவரது மனைவி நீரிழிவு நோய் மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடன் தொல்லை மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்