சென்னை
வங்கி கடனை கட்ட முடியாததால் விபரீத முடிவு: டாஸ்மாக் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
|வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாததால் டாஸ்மாக் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் ஜோசப் தெருவை சேர்ந்தவர் கோபிராஜன் (வயது 43). இவர் பெரம்பூர் அடுத்த மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்குச் சென்ற கோபிராஜ் மதிய உணவு சாப்பிட வீட்டிற்கு வந்துள்ளார். மதிய உணவு சாப்பிட்ட பின்னர், கோபிராஜ் படுக்கை அறைக்கு சென்று சிறிது நேரம் உறங்கி விட்டு வருவதாக மனைவி வனிதாவிடம் கூறி விட்டு கதவை உள்தாழ்ப்பால் போட்டுள்ளார்.
இந்த நிலையில், மாலை 6 மணி வரை அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த வனிதா கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவை தட்டியும் திறக்காததால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கோபி ராஜன் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை மீட்டு, தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது, கோபி ராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீசார் கோபிராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்ததில், கோபி ராஜன் தனியார் வங்கி ஒன்றில் ரூ.44 லட்சம் கடன் வாங்கியதும், கடனை சரியாக செலுத்தவில்லை என்று கூறி வங்கி அதிகாரிகள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோபிராஜன் மதியம் உணவு வேளையில் மது அருந்தி வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.