ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் டி.டி.எப். வாசன் மீது வழக்குப்பதிவு
|செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டியதாக டி.டி.எப்.வாசன் நேற்று கைது செய்யப்பட்டார்.
மதுரை,
பிரபல யூ-டியூபரும், மோட்டார் சைக்கிள் சாகசம் செய்து சர்ச்சையில் சிக்கியவருமான டி.டி.எப்.வாசனுக்கு 10 ஆண்டுகள் மோட்டார்சைக்கிள் ஓட்ட கோர்ட்டு தடை விதித்தது. இதையடுத்து டி.டி.எப். வாசன் கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார். கார் ஓட்டியபடி வீடியோவும் பதிவு செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 15-ந் தேதி இரவு 7.50 மணியளவில் மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் காரை அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகவும் செல்போனில் பேசிக்கொண்டே ஓட்டியும், அதனை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவு செய்து யூ-டியூப் சேனலில் பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மதுரை மாநகர ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் மணிபாரதி அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், டி.டி.எப்.வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸ்நிலையத்திற்கு அழைத்துவந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், செல்போன் பேசிக்கொண்டே கார் ஓட்டிய வழக்கில் கைதான டி.டி.எப். வாசன் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது பிறருக்கு மரணத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல் என்ற மற்றொரு பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வாசனுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனைக்கு பிறகு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் டி.டி.எப். வாசன் ஆஜர்படுத்தப்படுகிறார்.