< Back
மாநில செய்திகள்
உழவர் சந்தைக்கு களப்பயணம் சென்ற யு.கே.ஜி. குழந்தைகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

உழவர் சந்தைக்கு களப்பயணம் சென்ற யு.கே.ஜி. குழந்தைகள்

தினத்தந்தி
|
18 Jun 2022 12:21 AM IST

உழவர் சந்தைக்கு களப்பயணமாக யு.கே.ஜி. குழந்தைகள் சென்றனர். அப்போது காய்கறி விவரங்களை ஆர்வமுடன் கேட்டு அறிந்தனர்.

பள்ளியில் வகுப்பறையில் படிக்கும் சிலவற்றை மாணவர்கள் நேரில் அறிந்து கொள்ளும் வகையில் களப்பயணம் மேற்கொள்ளப்படுவது உண்டு. அந்த வகையில் அருங்காட்சியகம், நூலகங்கள், சுற்றுலா தலங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு பள்ளி குழந்தைகள் அழைத்து செல்லப்படுவது உண்டு.

இந்த நிலையில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யு.கே.ஜி. மாணவர்கள் களப்பயணமாக உழவர் சந்தைக்கு அழைத்து செல்லப்பட்டனர். மழலைக் குழந்தைகள் உழவர் சந்தையின் காய்கறி கடைகள் ஒவ்வொன்றுக்கும் சென்று அங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் பெயர்களை விற்பனை செய்வோரிடம் ஆர்வமாய் கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் அவற்றை நேரில் ஆர்வமுடன் பார்த்தனர்.

சந்தைக்கு வந்த மழலைக்குழந்தைகளை உழவர் சந்தை நிர்வாகத்தினர் பிஸ்கட்டுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி மகிழ்வித்தனர். விற்பனை செய்யும் கிராமத்து மக்களும் அன்போடு வரவழைத்து அவர்களின் ஆர்வத்தை பாராட்டி, நெல்லி, கொய்யா, பப்பாளி, பலாப்பழம், வாழைப்பழம் மற்றும் மாம்பழங்களை குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். இதுகுறித்து பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறுகையில், "ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது" என்பதைப்போல் படங்களில் உள்ள பொருட்களை நேரடியாக கண்டு மாணவர்கள் அறிந்துகொள்ள இதுமாதிரி களப்பயணங்களை தொடர்ந்து எங்கள் பள்ளியில் முன்னெடுக்கின்றோம்" என்று குறிப்பிட்டார்.

உழவர் சந்தை களப்பயணத்தில் ஆசிரியைகள் கலந்துகொண்டு குழந்தைகளை பத்திரமாக அழைத்துச்சென்று வந்தனர்.

மேலும் செய்திகள்