< Back
மாநில செய்திகள்
மாங்குரோவ் காடுகளை இங்கிலாந்து மந்திரி பார்வையிட்டார்
கடலூர்
மாநில செய்திகள்

மாங்குரோவ் காடுகளை இங்கிலாந்து மந்திரி பார்வையிட்டார்

தினத்தந்தி
|
30 July 2023 12:15 AM IST

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மாங்குரோவ் காடுகளை இங்கிலாந்து மந்திரி பார்வையிட்டார். தொடர்ந்து மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து அவர் கேட்டறிந்தார்

பரங்கிப்பேட்டை

இங்கிலாந்து மந்திரி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளையில் பிச்சாவரம் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. இந்த சுற்றுலா மையத்தில் அமைந்துள்ள மாங்குரோவ் காடுகளை படகு மூலம் சென்று சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.

இயற்கை எழில்கொஞ்சும் மாங்குரோவ் காடுகளை அங்குள்ள சிறிய வாய்க்கால்கள் வழியாக சென்று பார்வையிடுவது ஆனந்தத்தை தரும்.

இந்நிலையில் இந்த சுற்றுலா மையத்தை இங்கிலாந்து நாட்டின் சுற்றுச்சூழல் மந்திரி தெரேசா அனே கபே பார்வையிடுவதற்காக நேற்று பிச்சாவரம் வந்தார்.

வாழ்வாதாரம்

தொடர்ந்து அவர் அங்குள்ள மீனவர்கள் மற்றும் இருளர்களிடம் அவர்களின் வாழ்வாதாரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் மாங்குரோவ் காடுகளை அழிக்காமல் பாதுகாத்து வருவது குறித்தும் கேட்டறிந்தார். அதன் பிறகு மாங்குரோவ் காடுகள் மூலம் உங்களுக்கு என்ன வாழ்வாதாரம் கிடைக்கிறது? என்ன பிரச்சினை உள்ளது? என்பது குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர்கள் மாங்குரோவ் காடுகளில் உள்ள வேர்களில் மீன்கள், இறால்கள், நண்டுகள் இருக்கும். அதை பிடித்து நாங்கள் வாழ்க்கை நடத்தி வருகிறோம். சுனாமியின் போது எங்கள் பகுதியில் தான் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை என்றனர்.

மேலும் சமீபகாலமாக முகத்துவாரம் அடைக்கப்பட்டுள்ளதால் தண்ணீரில் எந்தவித ஏற்ற, இறக்கமும் இல்லாமல் உள்ளது. படகு மூலம் கடலுக்கு செல்ல முடியவில்லை. மீறி சென்றால் படகு சேதமாகி விடுகிறது. ஆகவே முகத்துவாரத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

பார்வையிட்டார்

இதை கேட்ட இங்கிலாந்து மந்திரி, எங்கள் நாட்டில் இதுபோன்ற மாங்குரோவ் காடுகள் கிடையாது. இந்த காடுகளை பார்க்க ஆசையாக இருக்கிறது. இதை பாதுகாத்து வருவதை பெருமையாக கருதுகிறேன். உங்களின் வாழ்வாதாரம் மென்மேலும் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன் என்றார். தொடர்ந்து அவர் படகு மூலம் சென்று மாங்குரோவ் காடுகளின் இயற்கை அழகை கண்டு ரசித்தார். இந்த நிகழ்ச்சியின் போது தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வன அலுவலர் தீபக் ஸ்ரீ வஸ்தவா, மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட வன அலுவலர் குருசாமி, சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன், கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா, துணை தலைவர் கிள்ளை ரவீந்திரன், தாசில்தார் செல்வக்குமார், வனச்சரக அலுவலர் இக்பால், சுற்றுலா மைய மேலாளர் தினேஷ் குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

ஒப்பந்தம்

அதைத்தொடர்ந்து இங்கிலாந்து மந்திரி பார்வையிட்டது குறித்து தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவிடம் கேட்டபோது, இங்குள்ள மாங்குரோவ் காடுகளை பார்வையிடுவதற்காக இங்கிலாந்து மந்திரி வந்தார். தொடர்ந்து அவர் இங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும், பல்வேறு நிலைகள் குறித்தும் பார்வையிட்டார். மாங்குரோவ் காடுகள் குறித்து புதிய ஒப்பந்தம் எதுவும் தற்போது இல்லை. வருங்காலத்தில் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றார்.

மேலும் செய்திகள்