நிழல் முதல் அமைச்சர் போல உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு
|தமிழகத்தின் நிழல் முதல் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கடந்த 3 ஆண்டுகளில் திமுக அரசு சொத்து வரி, பால் விலை, மின் கட்டணத்தை 50 சதவீதம் அளவுக்கு மேல் உயர்த்தி பொதுமக்களை ஏமாற்றி வருகிறது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் வேறு, இப்போதைய செயல்பாடுகள் வேறாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் 594 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு முற்றாக சீரழிந்து விட்டது.
கடந்த 3 ஆண்டுகளில் அம்மா உணவகம் பற்றி நினைக்காத முதல் அமைச்சர் முக ஸ்டாலின், திடீரென்று விழித்துக் கொண்டு அம்மா உணவகத்தில் ஆய்வு செய்துள்ளார். இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தல் வருவதால் இச்செயலில் ஈடுபட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம், அம்மா குடிநீர், விலையில்லா மடிக்கணினி, அம்மா சிமெண்ட் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய தலைமைச் செயலகம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. ஆனால், உள்ளே சென்று பார்த்தால் அது சர்க்கஸ் கூடாரம் போல இருப்பது தெரிந்தது. எனவே தான், அதிமுக ஆட்சியில் அது ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. திமுகவில் உழைப்பவருக்கு எப்போதும் அங்கீகாரம் தரப்படுவதில்லை. குடும்ப வாரிசுகளுக்கு மட்டுமே அங்கீகாரம் கிடைக்கும். தற்போது நிழல் முதல் அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். துணை முதல் அமைச்சர் பதவியை துரை முருகனுக்கு வழங்கலாம்" இவ்வாறு அவர் கூறினார்.