தந்தையின் உறுதியும், தாத்தாவின் கடும் உழைப்பும் உதயநிதியிடம் உள்ளது: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
|துணை முதல்-அமைச்சர் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் சிறந்த முறையில் பணியாற்றுவார் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
மதுரை,
மதுரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். எந்த பொறுப்பைக் கொடுத்தாலும் சிறப்பாக செய்யக்கூடியவர் உதயநிதி. கலைத்துறையில் சிறப்பாக பணியாற்றி, அமைச்சரான ஓராண்டில் சிறப்பாக பணி செய்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு அவரது தந்தை முக.ஸ்டாலின் உறுதியும், தாத்தா கலைஞரின் கடுமையான உழைப்பும் உள்ளது. துணை முதல்-அமைச்சர் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் சிறந்த முறையில் பணியாற்றுவார்.
பார்முலா 4 கார் பந்தயத்தை சென்னை மாநகரில் நடத்திக் காட்டிய பெருமை கொண்டவர். சனாதானத்தை பற்றி மிகத் தெளிவாக, வீரமாக பேசிய துணிச்சல் மிக்க இளைஞராக உதயநிதி இருந்தார். தமிழக காங்கிரஸ் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு வேலை கொடுக்கின்றனர். இன்னும் கொஞ்சம் தீவிர படுத்தவேண்டும்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது அனைத்து கட்சியினரின் விருப்பம்தான். அது இப்போது சாத்தியம் இல்லை என்பது அனைத்துக் கட்சிகளும் சொல்லி இருக்கின்றனர். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் இது பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறார். அதில் எந்த ஒரு தவறும் இல்லை. கூட்டணி முன்பை விட வலுவாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.