கள்ளக்குறிச்சி
தியாகதுருகம் தனியார் ஆஸ்பத்திரிக்கு 'சீல்'
|கருக்கலைப்புக்கு சென்ற பெண் திடீரென இறந்ததை தொடர்ந்து தியாகதுருகம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
கண்டாச்சிமங்கலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாடு கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி (வயது 38). இவரது மனைவி பெரியநாயகி (35). இவர்களுக்கு 2 ஆண் மற்றும் 1 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் 2 மாத கர்ப்பிணியான பெரியநாயகி கருக்கலைப்பு செய்வதற்காக தியாகதுருகம் சேலம் மெயின் ரோடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு பெரியநாயகி திடீரென இறந்தார்.
இதுகுறித்து அம்மாசி அளித்த புகாரின் பேரின் தியாகதுருகம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணை
இதைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் தனியார் ஆஸ்பத்திரியில் விசாரணை நடத்தினர். இதில் ஆஸ்பத்திரி, மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பதும், ஆஸ்பத்திரிக்கு வாங்கிய கருக்கலைப்பு மாத்திரை மற்றும் பயன்படுத்திய மாத்திரை குறித்த விவரங்களில் முரண்பாடு இருந்ததும் தெரியவந்தது.
மேலும் சரியான சிகிச்சை நெறிமுறைகளை பின்பற்றி இருந்தால் பெரிநாயகி மரணத்தை தடுத்து இருக்கலாம் எனவும் தெரிந்தது.
ஆஸ்பத்திரிக்கு 'சீல்'
இதையடுத்து கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவின்படி நேற்று கள்ளக்குறிச்சி சுகாதாரத்துறை இணை இயக்குனர் பாலச்சந்தர் தலைமையிலான அதிகாரிகள் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த செவிலியர்கள், நோயாளிகள் அனைவரையும் வெளியேற்றினர்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி தாசில்தார் விஜய் பிரபாகரன் அந்த ஆஸ்பத்திரிக்கு 'சீல்' வைத்தார். அப்போது திருக்கோவிலூர் மருத்துவ கண்காணிப்பாளர் செந்தில்குமார், கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தியாகதுருகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், வருவாய் ஆய்வாளர் சுகன்யா, கிராம நிர்வாக அலுவலர் ராஜா ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.