சென்னையில் ஒரே நாளில் இரு வாலிபர்கள் ரெயில் மோதி பலி
|சென்னையில் வெவ்வேறு சம்பவங்களில் இரு வாலிபர்கள் ரெயில் மோதி உயிரிழந்தனர்.
சென்னை,
கோவையில் இருந்து சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று நடைமேடை 9-க்கு வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த நடைமேடையில் நின்று கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திரன் மஞ்சி (வயது 28) என்ற வாலிபர் ஒருவர், 10-ம் நடைமேடைக்கு செல்ல தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது, கோவையில் இருந்து வந்து கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில், ரெயில் சக்கரத்தில் சிக்கி ரவீந்திரன் மஞ்சி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி சென்டிரல் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி மண்ணடிபேட்டையை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன் (24). பி எஸ்சி நர்சிங் படித்துள்ள இவர், சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார். இதற்காக மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி அருகில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் தனது நண்பர்களுடன் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மின்சார ரெயிலில் மீனம்பாக்கம் ரெயில் நிலையம் வந்திறங்கிய வெற்றிச்செல்வன், தனது குடியிருப்பு பகுதிக்கு செல்ல மீனம்பாக்கம் - பழவந்தாங்கல் ரெயில் நிலையங்களுக்கு இடையே செல்போனில் பேசியபடியே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது எழும்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது. இதில் ரெயில் சக்கரத்தில் சிக்கி உடல் துண்டாகி வெற்றிச்செல்வன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.