சென்னை
மெரினா காமராஜர் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்; 2 பேர் பலி
|காமராஜர் சாலையில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 வடமாநில இளைஞர்கள் பலியாகினர்.
நேருக்கு நேர் மோதியது
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னை மெரினாவில் நேற்று மாலை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது காமராஜர் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் விவேகானந்தர் இல்லம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் மெரினா சாலையைக் கடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் நேப்பியர் பாலத்திலிருந்து சாந்தோம் நோக்கி இருசக்கர வாகனத்தில் மற்றொரு இளைஞர் வந்துகொண்டிருந்தார். இந்த 2 இருசக்கர வாகனங்களும் நேருக்கு நேராக மோதியது.
2 பேர் பலி
இதில் 2 இளைஞர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில், பின்னால், வந்த கார் இளைஞர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதுகுறித்து, அண்ணாசதுக்கம் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மற்றொரு நபரை ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் கொண்டுசெல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அண்ணாசதுக்கும் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், உயிரிழந்த இருவருமே வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் குறித்த அடையாளங்கள் இன்னும் தெரியவில்லை என போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
மீஞ்சூர் நந்தியம்பாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் விமலேஷ் (வயது 25). இவர். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் புழலில் உள்ள தனது நண்பர் திருநேசன் என்பவரை பார்க்க வந்தார். பின்னர் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கோயம்பேட்டில் உள்ள மற்றொரு நண்பரை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். புழல் ரெட்டேரி சிக்னல் அருகே சென்றபோது பின்னால் வந்த கிரேன் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விமலேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவருடைய நண்பரான திருநேசன் பலத்த காயங்களுடன் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் காதர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.