< Back
மாநில செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேருக்கு  6 ஆண்டுகள் சிறை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை

தினத்தந்தி
|
30 Nov 2022 8:10 PM GMT

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

கும்பகோணம்,

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சங்கிலி பறிப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாணாதுறை வடக்கு வீதியை சேர்ந்தவர் கமலா(வயது 66). இவர், கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ந் தேதி தனது வீட்டின் அருகே உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், கமலா அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பொதுமக்களிடம் சிக்கினர்

அதேநாள் இரவு கும்பகோணம் மடத்துத்தெரு யானையடி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவை சேர்ந்த வேல்முருகன் மனைவி கற்பகம்(48) கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் பறிக்க முயன்றனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த கற்பகம் கூச்சலிட்டார். உடனே சம்பவ இடத்தில் திரண்ட அக்கம் பக்கத்தினர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை சுற்றி வளைத்து பிடித்து கும்பகோணம் கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணை

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவர்கள் திருச்சி திருவானைக்காவல் அருகே உள்ள களஞ்சியம் பகுதியை சேர்ந்த சக்தி என்ற சலீம்(40) மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பச்சைமலையான் கோட்டை பகுதியை சேர்ந்த பீருஷாமகன் முகமது நவாஸ்(28) என தெரியவந்தது.இவர்கள் இருவரும் சேர்ந்து கும்பகோணம் பாணாதுறை வடக்கு வீதி பகுதியை சேர்ந்த கமலா அணிந்திருந்த சங்கிலியை பறித்து சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

6 ஆண்டுகள் சிறை

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்தி என்ற சலீம், முகமதுநவாஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு கும்பகோணம் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்குகளின் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது.இதில் 2 வழக்குகளிலும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சக்தி என்ற சலீம் மற்றும் முகமதுநவாஸ் ஆகியோருக்கு ஒவ்வொரு வழக்குக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வீதம் 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக தலா 6 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி பாரதிதாசன் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்