திருவள்ளூர்
சோழவரம் அருகே மேம்பாலத்தில் பழுதாகி நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி 2 பேர் பலி
|சோழவரம் அருகே மேம்பாலத்தில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றொருவர் படுகாயமடைந்தார்.
பழுதாகி நின்ற லாரி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. கன்டெய்னர் லாரி சோழவரம் அருகே வரும்போது சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பன்சத்திரம் மேம்பாலத்தில் பழுதாகி நின்றது. அப்போது கும்மிடிப்பூண்டியில் இருந்து இரும்பு ராடுகளை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி அதிவேகமாக வந்த டிரெய்லர் லாரி மேம்பாலத்தில் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் டிரெய்லர் லாரியின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது. லாரியில் பயணித்த 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
2 பேர் பலி
இதை கண்ட வாகன ஓட்டிகள் டிரெய்லர் லாரியில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். அவர்களால் முடியாததால் உடனடியாக விபத்து குறித்து சோழவரம் போலீசார் மற்றும் செங்குன்றம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிரேன் மூலம் 2 லாரிகளையும் அப்புறப்படுத்தி டிரெய்லர் லாரியில் சிக்கிய 3 பேரையும் மீட்டனர். இதில் லாரி டிரைவர் சோளம்யாதவ் (வயது 22), அவருடன் பயணம் செய்த இம்ரான்கான் (22) சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த கார்த்திக் யாதவ் (17) என்பவரை போலீசார் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஸ்டான்லி அஸ்பத்திரிக்கு சிகிச்சைகாக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து செங்குன்றம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை கண்டதும் பழுதாகி நின்ற லாரி டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.