< Back
மாநில செய்திகள்
தனித்தனி விபத்தில்  வாலிபர் உள்பட 2 பேர் சாவு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் சாவு

தினத்தந்தி
|
14 Jun 2022 9:40 PM IST

விழுப்புரம், திருக்கோவிலூர் அருகே நடந்த தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருக்கோவிலூர், ஜூன்.15-

கார் மோதல்

விழுப்புரம் அருகே உள்ள கெடார் வி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் ராஜேஷ் (வயது 27). கெடார் பகுதியை சேர்ந்தவர் குமார் மகன் சதீஷ் (27). நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று காலை வி.புதுப்பாளையம் விழுப்புரம்-திருவண்ணாமலை சாலையோரம் நின்று, தங்களது மோட்டார் சைக்கிள்களில் தனித்தனியாக அமர்ந்தபடி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த கார் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீது பயங்கரமாக மோதியது.

தீவிர சிகிச்சை

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜேஷ், சதீஷ் ஆகியோரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சதீசுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து ராஜேஷின் தந்தை வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விவசாயி சாவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து(60), விவசாயி. இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் மணலூர்பேட்டை நோக்கி புறப்பட்டார். கூவனூர்-மணலூர்பேட்டை சாலையில் சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளும், மாரிமுத்து ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டது. இதில் பலத்த காயமடைந்த மாரிமுத்துவை அந்தவழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிக்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இதற்கிடையே விபத்தில் சிக்கிய மற்றொரு மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்