திண்டுக்கல்
தொழிலாளி உள்பட 2 பேர் கைது
|வடமதுரை அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வடமதுரை அருகே உள்ள பிச்சம்பட்டியை சேர்ந்தவர் ராமன்அம்பலம் (வயது 45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பெருமாயி. இந்த நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பெருமாயி கடந்த 10 ஆண்டுகளாக அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையே ராமன்அம்பலம் தனக்கு ஜீவனாம்சம் தர வேண்டுமென்று வேடசந்தூர் கோர்ட்டில் பெருமாயி வழக்கு தொடர்ந்தார். அதில் ராமன்அம்பலம் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் பெருமாயிக்கு ஜீவனாம்சமாக கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் ராமன்அம்பலம் ஜீவனாம்ச தொகையை கொடுக்காததால் அவரை நேரில் ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராமன்அம்பலம், தனது உறவினர் வெள்ளைச்சாமியுடன் கடந்த 17-ந்தேதி பெருமாயி வீட்டிற்கு சென்றார். அங்கு பெருமாயியை தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பெருமாயி வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து ராமன்அம்பலம், வெள்ளைச்சாமி ஆகியோரை கைது செய்தார்.