கள்ளக்குறிச்சி
தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
|தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கச்சிராயப்பாளையம் அருகே கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் சூர்யா(வயது 23). இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சிக்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தார். கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகில் வந்தபோது எதிரே மோட்டார் சைக்கிள் சூர்யா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம் அருகே உள்ள கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த தொப்பை மனைவி ஜெயக்கொடி(வயது 40). சம்பவத்தன்று இவரும், அதே ஊரை சேர்ந்த 10 பேர் கொசப்பாடி கிராமத்தில் ஒருவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் களை வெட்டுவதற்காக ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாரதவிதமாக ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜெயக்கொடி சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.