மதுவில் சயனைடு கலந்ததால் இருவர் உயிரிழப்பு - தஞ்சை மாவட்ட கலெக்டர் தகவல்
|இறந்தவர்களின் உடல் கூறு ஆய்வில் சயனைடு விஷம் உள்ளதாக தகவல் வந்திருப்பதாக தஞ்சை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தஞ்சை,
தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் பகுதியில் அரசு மதுபானக்கடை ஒட்டிய அரசு பாரில் மது குடித்த இருவர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பாருக்கும் டாஸ்மாக் கடைக்கும் தஞ்சை பொறுப்பு கோட்டாட்சியர் பழனிவேல் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
மேலும் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற புகாரில் தனியார் பார் உரிமையாளர் பழனி மீது கிழக்கு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தஞ்சாவூரில் 2 பேர் உயிரிழப்புக்கு காரணமான மதுபானத்தை தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியதில் சயனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் கூறுகையில், "மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்து தற்கொலை முயற்சியாக இருக்கலாம். இருவர் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறோம். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனையின் காரணமாக இது நடைபெற்றதாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் சிறப்பு குழு அமைத்து விசாரித்து வருகிறோம். பார் உரிமையாளர் தவறு செய்திருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் உறுதியளித்துள்ளார்.