< Back
மாநில செய்திகள்
தேவகோட்டை அருகே ஆற்று நீரை பங்கிடுவதில் இரு தரப்பினர் தகராறு
சிவகங்கை
மாநில செய்திகள்

தேவகோட்டை அருகே ஆற்று நீரை பங்கிடுவதில் இரு தரப்பினர் தகராறு

தினத்தந்தி
|
24 Aug 2023 7:03 PM GMT

தேவகோட்டை அருகே ஆற்று நீரை பங்கிடுவதில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

தேவகோட்டை

தேவகோட்டை அருகே உள்ள முத்துநாட்டு கண்மாய்க்கு தேனாற்றில் இருந்து தண்ணீர் செல்வது வழக்கம். இந்த கண்மாய்க்கு வரும் தண்ணீரை தேரளப்பூர் அருகே கரை போட்டு அடைத்து வைத்ததாகவும், முத்துநாட்டு கண்மாய் நிறைந்த பின்பு வெளியேறும் தண்ணீர் மீண்டும் அதே தேனாற்று வழியாக பிற கண்மாய்களுக்கு சென்று வந்ததாக அப்பகுதி பாசன விவசாயிகள் கூறினர். அந்த கரையை அகற்றினால்தான் களபங்குடி, கப்பலூர், கண்ணங்குடி, கண்டியூர் ஆகிய கண்மாய்களுக்கு தேனாற்று நீர் வரும் என மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதை தொடர்ந்து தேவகோட்டை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அந்த கரையை கடந்த ஆண்டு அகற்றினர். முத்துநாட்டு கண்மாய் பாசன விவசாயிகள் தேவகோட்டை கோட்டாட்சியரிடம் முறையிட்டனர். பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி சமாதான கூட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அந்த கூட்ட நடவடிக்கையின்படி எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று திடீரென முத்துநாட்டு கண்மாய் பாசன விவசாயிகள் தேனாற்றின் குறுக்கே கரை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு அங்கு வந்த எதிர் தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்கள், விவசாயிகள் குவிந்தனர். இதுகுறித்து அறிந்த தேவகோட்டை வட்டாட்சியர் செல்வராணி, துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக நிலை ஏற்படுத்தப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்