குடிபோதையில் பைக்கில் வந்த 2 பேர் டெம்போ வேன் மீது மோதியதில் படுகாயம்
|சேலம் அருகே குடிபோதையில் பைக்கில் தள்ளாடி வந்த 2 பேர் டெம்போ வேன் மீது மோதியதில் படுகாயம் அடைந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே ஒதியத்தூர் சாலையில் நேற்று மாலை 6 மணி அளவில் பைக்கில் குடி போதையில் இரண்டு பேர் தாறுமாறாக ஆத்தூர் நோக்கி ஓட்டி கொண்டு சென்றனர். இவர்கள் வாகனத்தை ஓட்டுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பின்னால் பைக்கில் வந்த நபர்கள் வீடியோ எடுத்து வந்தனர்.
அப்போது முன்னால் வந்த அனைத்து வானத்தையும் மோதுவதை போல் சென்றதால் தொடர்ந்து வீடியோ எடுத்தப்படி சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக முன்னாள் வந்த டெம்போ மீது இவர்கள் நேராக போய் மோதியதில் இரண்டு பேரும் சாலையில் விழுந்து விபத்துக்கு உள்ளானார்கள்.
உடனடியாக அருகில் உள்ளவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்கள் பள்ளக்காடு பகுதியை சேர்ந்த மணி, அங்கமுத்து என்பது தெரியவந்தது. இதில் மணி பலத்த காயம் அடைந்ததால் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த கெங்கவல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்தார்களா? அல்லது வேண்டுமென்று தாறுமாறாக ஓட்டி வந்தார்கள்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.