சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் - 4 பேர் பணியிடை நீக்கம்
|தஞ்சையில் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்த சம்பவத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கீழவாசல் படைவெட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 68) மீன் வியாபாரி. கீழவாசல் பூமால்ராவுத்தன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவேக் (36) கார் டிரைவர். இவர்கள் நேற்று மதியம் கீழவாசல் தற்காலிக மீன் மார்க்கெட் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான பாரில் மது வாங்கி குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தனர். ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் குப்புசாமி இறந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி விவேக் இறந்தார்.
இவர்கள் இருவரது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில் சயனைடு கலந்த மதுவை வாங்கி குடித்ததால் இறந்தது தெரியவந்தது. இவர்கள் ஒருவர் குடித்த மதுவை மற்றொருவர் குடித்ததால் இரண்டு பேரும் பலியாகினர். தற்கொலையா ? அல்லது கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் வேலை பார்த்த மேற்பார்வையாளர் முருகன், விற்பனையாளர்கள் 3 பேர் என மொத்தம் 4 பேரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சவுந்தரபாண்டியன் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே டாஸ்மாக் பார் உரிமையாளர் செந்தில் நா.பழனிவேல், ஊழியர் காமராஜ் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.