சிவகங்கை
தேவகோட்டை அருகே கட்டிட தொழிலாளிக்கு கத்திக்குத்து - 2 பேர் கைது...!
|தேவகோட்டை அருகே கட்டிட தொழிலாளியை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம்,தேவகோட்டை கம்பர் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன்கள் விக்னேஷ் மற்றும் பாலாஜி (வயது 35).இருவரும் கட்டிட தொழிலாளர்கள்.கடந்த சில மாதங்களாக விக்னேஷ் வீட்டில் சம்பளத்தை சரியாகக் கொடுக்காமல் அடிக்கடி மது குடித்து வந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி விக்னேஷ்சுடன் வேலை பார்க்கும் அவரது நண்பர்களான அம்மாசி(32),அழகப்பன் (36) ஆகியோருடன் நேற்று என் அண்ணனுக்கு ஏன் மது வாங்கி கொடுத்து இப்படி செய்கிறீர்கள், என வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை பாலாஜி கட்டிட வேலைக்கு செல்வதற்காக வழக்கம்போல் தேவகோட்டை ஆர்ச் பூங்கா அருகே சக தொழிலாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது ஆத்திரத்துடன் அங்கு வந்த அம்மாசி,அழகப்பன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாலாஜியை சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பாலாஜியை அங்கிருந்தவர்கள் மீட்டு தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது உடல்நிலை மோசமானதால் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பாலாஜி தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் தொடர்பாக தேவகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அம்மாசி,அழகப்பன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.