< Back
மாநில செய்திகள்
பெண் பூசாரி பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்:கோவிலுக்குள் நுழைந்ததை தடுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றேன் என்று கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

பெண் பூசாரி பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்:கோவிலுக்குள் நுழைந்ததை தடுத்ததால் கழுத்தை நெரித்து கொன்றேன் என்று கைதான தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

தினத்தந்தி
|
6 Oct 2023 12:15 AM IST

ரிஷிவந்தியம் அருகே பெண் பூசாரி பிணமாக கிடந்த வழக்கில் கோவிலுக்குள் நுழைந்ததை தடுத்ததால் அவரை கொலை செய்ததாக தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ரிஷிவந்தியம்,

பெண் பூசாரி பிணம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ள அலியாபாத்பாளையத்தை சேர்ந்தவர் கணபதி மனைவி ஆனந்தாயி(வயது 73). கடந்த 20 வருடங்களுக்கு முன்பு கணபதி இறந்து விட்டதால், ஆனந்தாயி அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் தங்கி பூசாரியாக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி இரவு வழக்கம்போல் பூஜை முடிந்த பின்னர் கோவிலை பூட்டிவிட்டு கோவில் வளாகத்திலேயே ஆனந்தாயி படுத்து தூங்கினார்.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தா்கள் ஆனந்தாயி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது, காட்டுஎடையார் கிராமத்தை சேர்ந்த சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், கரும்பு வெட்டும் தொழிலாளியான அருளப்பன் மகன் அலெக்சாண்டர் (34) என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் அவரிடம் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து அவரிடம் போலீசாா் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

கழுத்தை நெரித்து கொலை

கடந்த 3-ந்தேதி இரவு 11.30 மணியளவில், அலெக்சாண்டர் மதுபோதையில் மாரியம்மன் கோவில் வழியாக சென்றார். அப்போது அவருக்கு தாகம் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் குடிப்பதற்காக அலெக்சாண்டர் கோவிலுக்குள் நுழைந்தார். இதை பார்த்த ஆனந்தாயி அலெக்சாண்டரை தடுத்து திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அலெக்சாண்டர் ஆனந்தாயியை அடித்தார். இதில் அவர் கூச்சலிட்டதால், அவரை கோவிலுக்கு பின்புறம் இழுத்துச்சென்று கழுத்தை நெரித்து அலெக்சாண்டர் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

மேற்கண்ட தகவல் போலீ்ஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அலெக்சாண்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்