< Back
மாநில செய்திகள்
எழும்பூரில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் திருப்பம்: காதலிப்பது போல் நடித்து கதையை முடித்த மிசோரம் அழகி கைது
சென்னை
மாநில செய்திகள்

எழும்பூரில் ரவுடியை வெட்டிக்கொன்ற வழக்கில் திருப்பம்: காதலிப்பது போல் நடித்து கதையை முடித்த மிசோரம் அழகி கைது

தினத்தந்தி
|
16 Sept 2023 9:07 AM IST

சென்னையில் ரவுடி வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் அவரை காதலிப்பது போல் நடித்து கதையை முடித்த மிசோரம் அழகி ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சென்னை புழல் காவாங்கரை 15-வது தெருவை சேர்ந்தவர் ரவுடி சத்யா (வயது 24). இவர் கடந்த 10-ந் தேதி இரவு எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள டீக்கடை முன்பு மர்ம கும்பலால் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, துணை கமிஷனர் தேஷ்முக், உதவி கமிஷனர் ரகுபதி ஆகியோர் மேற்பார்வையில், எழும்பூர் இன்ஸ்பெக்டர் திருமால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர்களை ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்தநிலையில், மிசோரம் மாநிலத்தை சேர்ந்த ஜூலி என்று அழகி ஒருவரும், அவரது காதலன் கிஷோர் என்பவர் உள்பட மேலும் 5 பேர்களை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பாக திடுக்கிடும் தகவல்களை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

ரவுடிகள் ஒருவரை ஒருவர் பழி வாங்குவதற்காக கொலை செய்யப்படுவது வழக்கமான ஒன்று. அது போல தான் ரவுடி சத்யாவும் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டதற்கு ஒரு பின்னணி வரலாறு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சென்னை பேசின் பிரிட்ஜில் சிவராஜ் என்ற ரவுடி கொலை செய்யப்பட்டார். அவரை கொன்றதற்கு பழிக்குப் பழி வாங்க அவரது கூட்டாளிகள் சபதம் போட்டு செயல்பட்டனர்.

அதில் முதலாக கொல்லப்பட்டவர் வக்கீல் அகிலன் ஆவார். 2016-ம் ஆண்டு அகிலன் கொல்லப்பட்டார். அடுத்து 2-வது பலியாக 2020-ம் ஆண்டு நாய் ரமேஷ் என்பவரை தீர்த்துக் கட்டினார்கள். அடுத்து 3-வதாக ரவுடி சத்யாவை தீர்த்து கட்ட உரிய காலத்திற்காக காத்து இருந்தனர். ரவுடி சிவராஜ் 8.9.2016 அன்று கொல்லப்பட்டார்.

சத்யாவை தீர்த்து கட்டுவதற்கு காதல் வியூகம் ஒன்றை அமைத்தனர். அந்த காதல் வியூகத்தில் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த அழகி ஜூலி என்பவர் பயன்படுத்தப்பட்டார். ஜூலி சத்யாவின் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி உள்ளார். இன்ஸ்டாகிராமிலும் சத்யாவோடு தகவல் பரிமாறி உள்ளார். சத்யாவை உயிருக்கு உயிராக காதலிப்பது போல் நடித்து உள்ளார். சத்யாவும் அதை உண்மை என்று நம்பி உள்ளார். ஆனால் ஜூலி தனது முகத்தை சத்யாவிடம் காட்டவில்லை. செல்போனிலும், இன்ஸ்டாகிராமிலுமே தகவலை பரிமாறி உள்ளார்.

கடந்த 8-ந் தேதி சிவராஜ் நினைவு தினமாகும். அன்றைய தினம் சத்யாவிடம் ஜூலி செல்போனில் பேசுகிறார். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்டபடி என் முகத்தை உங்களிடம் காட்டுகிறேன். எழும்பூருக்கு நேரடியாக வாருங்கள் என்று ஜூலி அழைப்பு விடுத்தார். ஜூலியின் அழைப்பை ஏற்று கடந்த 10-ந் தேதி இரவு ஜூலியை முதன் முதலாக நேரில் பார்ப்பதற்காக சத்யா எழும்பூர் வந்தார். அப்போது அவரை தீர்த்துக் கட்டிவிட்டனர்.

காதலிப்பது போல் நயவஞ்சக நாடகம் ஆடி சத்யாவை தீர்த்துக் கட்டுவதற்கு மூளையாக செயல்பட்ட ஜூலி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காதலன் கிஷோர் உள்பட மேலும் 4 பேரும் கைதாகி உள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ரவுடிகளின் இந்த பழிவாங்கும் படலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

மேலும் செய்திகள்