தமிழக வெற்றிக் கழக மாநாடு: இன்று ஆலோசனை கூட்டம்
|தமிழக வெற்றிக் கழக மாநாடு அக்டோபர் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது.
சென்னை,
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக்கழக கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
சென்னை அடுத்த பனையூரில் நடக்க உள்ள இந்த கூட்டத்திற்கு கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்குகிறார். மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில் மாநாடு தொடர்பான கருத்துக்கள் பரிமாறப்பட்டு, விவாதிக்கப்படுகிறது.
மாநாட்டுக்கு ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்து எவ்வளவு பேரை அழைத்து வர வேண்டும் என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. மாநாட்டில், போலீசார் விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி நடப்பது, ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டைகளை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.