கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்துவதாக டி.வி. நடிகர் மீது நடிகை திவ்யா பரபரப்பு புகார்
|கர்ப்பிணியான தன்னை அடித்து துன்புறுத்துவதாக டி.வி. நடிகர் அரணவ் மீது அவரது மனைவி நடிகை திவ்யா புகார் அளித்து உள்ளார். அதன்பேரில் அரணவிடம் போலீசார் 4 மணி நேரம் விசாரித்தனர்.
பூந்தமல்லி,
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'செவ்வந்தி' தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை திவ்யா. 29 வயதான இவரது சொந்த ஊர் பெங்களூரு ஆகும். 'கேளடி கண்மணி' என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான இவர், 'மகராசி' என்ற தொடரிலும் நடித்து பிரபலமானார்.
இவரும், தற்போது மற்றொரு ெதாலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'செல்லம்மா' என்ற தொடரில் நடித்து வரும் அரணவ்(33) என்பவரும் 2017-ல் ஒரே தொடரில் நடித்த போது பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இருவரும் மதுரவாயலில் ஒரே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் இந்து மற்றும் முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது நடிகை திவ்யா கர்ப்பமாக இருப்பதாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் அரணவ் அடித்ததில் கீழே விழுந்த திவ்யாவுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதற்காக திவ்யா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆஸ்பத்திரி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் போரூர் மகளிர் போலீசார் நடிகை திவ்யாவிடம் விசாரித்து வருகின்றனர்.
2 வீடியோக்கள் வெளியீடு
இதற்கிடையில் தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், கணவர் தன்னை அடித்ததால் எப்போது வேண்டுமானாலும் தனது கரு கலையலாம் என்றும் நடிகை திவ்யா, 2 வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
சமீபத்தில் தான் எனக்கும், அரணவ்க்கும் திருமணம் முடிந்தது. அவர் தற்போது 'செல்லம்மா' தொடரில் நடித்து வருகிறார். ஒரே தொடரில் நடித்து வந்த நாங்கள், ஒரே வீட்டில் வசித்து வந்தோம். 2 வருடத்துக்கு முன்பு நாங்கள் ஒரு வீடு வாங்கினோம். அந்த கடனை எல்லாம் நான் தான் கட்டினேன். 'கல்யாணப்பரிசு' தொடருக்கு பிறகு கொரோனா காலத்தில் அரணவ்க்கு எந்த ஒரு தொடரும் கைவசம் இல்லை.
கரு கலையலாம்
நான் தான் 'மகராசி' தொடரை முடித்துவிட்டு வங்கி கடனை எல்லாம் கட்டினேன். அரணவ் தனியாக வாங்கி இருந்த கடனையும் நான்தான் கட்டினேன். அவருக்கு எந்த ஒரு கஷ்டத்தையும் கொடுக்காமல் குழந்தையை போல் நான் பார்த்துக்கொண்டேன்.
ஆனால் என் கணவர் என்னை அடித்ததால் நான் கீழே விழுந்ததில் என்னுடைய வயிற்றில் அடிபட்டது. என்னுடைய காலில் அவர் மிதித்ததால் நான் மயங்கி விழுந்துட்டேன். தற்போது நான் ஆஸ்பத்திரியில் உள்ளேன். டாக்டர்கள் எப்போது வேண்டுமானாலும் எனது கரு கலையலாம் என கூறுகின்றனர். எனது கணவர் எனக்கு வேண்டும். எனது குழந்தையை காப்பாற்ற வேண்டும். எனக்காக அனைவரும் கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் வீடியோவில் கண்ணீர் மல்க பேசி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆவடி கமிஷனரிடம் புகார்
இதற்கிடையில் நடிகர் அரணவ், தனது மனைவி திவ்யா மீது ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை நேற்று அளித்தார்.
அதில், "என் மனைவி திவ்யா, எனது சம்மதம் இல்லாமல் என் குழந்தையை கலைக்க அவரது நண்பர் உதவியுடன் திட்டம் தீட்டி உள்ளார். அவருக்கு ஏற்கனவே கர்நாடக மாநிலத்தில் திருமணம் நடந்து அதை அவர் முறையாக விவாகரத்து செய்ததாக தெரிவித்தார்.
தன்னை உடனடியாக திருமணம் செய்யவும் வற்புறுத்தினார். பின்னர் அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். 27-06-22 அன்று நாங்கள் பெற்றோருக்கு தெரியாமல் சென்னை வடக்கு மாவட்டம் சார்பதிவாளர் அலுவலகத்தில் முறையாக பதிவு திருமணம் செய்தோம். அன்றுதான் அவரது விவாகரத்து நகலை என்னிடம் கொடுத்தார். அதில் 18-01-22 அன்றுதான் விவாகரத்து கிடைத்தது என்றும், அவருக்கு ஒரு மகள் இருப்பதும் தெரிந்தது.
என்னுடைய திருமணம் முடிவு செய்த பின்னரே எனக்கு இதுபற்றி தெரிய வந்ததால் நானும் என்னுடைய மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அவருடன் என்னுடைய இல்லற வாழ்க்கையை துவங்கினேன். என்னுடைய குழந்தையை கலைக்க நினைக்கும் என் மனைவி திவ்யா மற்றும் அவரது நண்பர், அதற்கு துணை போன டாக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறி இருந்தார்.
4 மணி நேரம் விசாரணை
இந்த புகார் மனு குறித்து விசாரிக்கும்படி போரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பேரில் போரூர் உதவி கமிஷனர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன், மாங்காடு போலீஸ் நிலையம் வந்தார்.
அங்கு தனது வக்கீலுடன் நடிகர் அரணவ் வந்தார். அவரிடம் நடிகை திவ்யா அளித்த புகார் தொடர்பாகவும், ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் அவர் அளித்த புகார் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 4 மணிநேரத்துக்கும் மேலாக இந்த விசாரணை நீடித்தது.
நடிகை திவ்யா தரப்பில் யாரும் விசாரணைக்கு வராததால் மற்றொரு நாள் விசாரணைக்கு வரும்படி எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.