சென்னை
பெரம்பூர் துணிக்கடையில் கைவரிசை: படப்பிடிப்பில் டி.வி.நடிகரின் செல்போன் திருட்டு - 2 பெண்களுக்கு வலைவீச்சு
|பெரம்பூர் துணிக்கடை படப்பிடிப்பில் டி.வி.நடிகரின் செல்போன் திருடிய 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சென்னை புழுதிவாக்கம் வில்லேஜ் சாலையைச் சேர்ந்தவர் அழகப்பன் (வயது 33). இவர் கடந்த 10 வருடங்களாக தனியார் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல துணிக்கடையில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அப்போது அங்குள்ள மேஜை மீது தனது விலைமதிப்புள்ள செல்போனை வைத்துவிட்டு படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அவர் படப்பிடிப்பு முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது, செல்போன் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, வாடிக்கையாளர் போர்வையில் வந்த 2 பெண்கள் அழகப்பனின் செல்போனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அழகப்பன் திரு.வி.க.நகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து செல்போன் திருடிய பெண்களை வலைவீசி தேடி வருகின்றனர்.