திருநெல்வேலி
"தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும்" - மத்திய மந்திரி வி.கே.சிங்
|“தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும்” என்று மத்திய மந்திரி வி.கே.சிங் கூறினார்.
நெல்லை மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
74 விமான நிலையங்கள்
கடந்த 2014-ல் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் இருந்தது. ஆனால் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இந்த 9 ஆண்டுகளில் மேலும் 74 விமான நிலையங்கள் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் புதிய விமான நிலையம் அமைப்பதில் தொழில்நுட்ப பிரச்சினைகள் இருக்கிறது. அதுதொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம். காரைக்குடியிலும் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி விமான நிலையம்
சென்னை, தூத்துக்குடி, மதுரை ஆகிய விமான நிலையங்களில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. தென்தமிழகத்தில் வேலைவாய்ப்புகளும், தொழிற்சாலைகளும் அதிகரித்து வருவதால் தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்படும்.
இந்தியா பொருளாதார வளர்ச்சி, அரசியல் மேம்பாடு மற்றும் சமுதாய மேம்பாட்டில் தொடர்ந்து முன்னேறி வருகிறது. 2014-ல் இருந்ததைவிட கடந்த 9 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டி உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் 10-வது இடத்தில் இருந்து வந்த இந்தியா பா.ஜனதாவின் இந்த 9 ஆண்டு ஆட்சி காலத்தில் 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
வேலைவாய்ப்பு
மத்திய அரசு வேலைவாய்ப்பு வழங்குவதை விளம்பரப்படுத்துவது இல்லை. 4 சதவீதம் பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்க முடியும். மீதம் உள்ள நபர்களுக்கு தனியார் மூலமாக வேலைவாய்ப்புகள் வழங்க முடியும். ஒரு வருடத்திற்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதி அளித்தோம். ஆனால் கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுதொழில் முனைவோருக்காக வழங்கப்படும் முத்ரா கடன் திட்டத்தின் மூலம் 76 லட்சம் பேர் புதிய வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட கூடுதல் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு மட்டுமே நிதி ஒதுக்குகிறது. பணிகள் முழுவதும் மாநில அரசால் செய்யப்படுகிறது. இந்த பணிகளில் தவறு மற்றும் குறைபாடு இருந்தால் மத்திய அரசு அதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும். தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க பொதுமக்கள் ஒரு அமைப்பாக கூடி கழிவுகள் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு முயற்சித்தால் மட்டுமே தாமிரபரணி நதியில் கழிவுகள் கலப்பதை தடுக்க முடியாது. பொதுமக்களும் ஒன்றிணைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மாநாடு
முன்னதாக விக்கிரமசிங்கபுரத்தில் மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெற்ற அம்பை சட்டமன்ற பயனாளிகள் மாநாடு நடந்தது. பா.ஜ.க. நெல்லை மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். விக்கிரமசிங்கபுரம் நகர செயலாளர் எம்.கே.டி.ராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மத்திய மந்திரி வி.கே.சிங் கலந்து கொண்டு பேசுகையில், மகளிர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் என பலதரப்பினரும் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். நம் நாடு வளர்ச்சியடைந்து முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். அதற்கு உங்களது ஒத்துழைப்பு இருக்க வேண்டும்" என்றார்.
கூட்டத்தில் பா.ஜ.க மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், பிற்படுத்தப்பட்டோர் மாநில பிரிவு செயற்குழு உறுப்பினர் பால்மாரியப்பன், துணை தலைவர் ராம்ராஜ் பாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலச்சந்தர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குட்டி, பிரசார பிரிவு மாவட்ட செயலாளர் வீரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.