சென்னை
16 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமான வழக்கில் திருப்பம்: தன்னை திட்டியவரை பழிவாங்க தீ வைத்தவர் கைது
|16 இருசக்கர வாகனங்கள் எரிந்து நாசமான வழக்கில் திடீர் திருப்பமாக தன்னை திட்டியவரை பழிவாங்க வாகனத்துக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மதுரவாயல், வி.ஜி.பி. அமுதம் நகர் பகுதியில் உள்ள காலி மனையில் வீடு கட்டுவதற்காக ஓலை குடிசை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த ஓலை குடிசையில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் அதன் அருகே நிறுத்தி இருந்த 16 இருசக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானதாக கோயம்பேடு போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.
அதன்பேரில் கோயம்பேடு உதவி கமிஷனர் ரமேஷ்பாபு, இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா ஆகியோர் தலைமையிலான கோயம்பேடு போலீசார், தீ விபத்துக்கு மின்கசிவு காரணமா? அல்லது நாசவேலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா கட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர் அங்கிருந்த ஓலை குடிசைகளின் மேலிருந்த ஓலை மற்றும் வைக்கோலை எடுத்து ஒரு இருசக்கர வாகனத்தின் மீது வைத்து தீ வைத்துவிட்டு செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது.
அந்த காட்சிகளின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது 51) என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர்.
கடந்த தமிழ் புத்தாண்டு அன்று குடிபோதையில் அதே பகுதியில் படுத்து இருந்த ராமச்சந்திரனிடம் இருந்து செல்போன், பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். அதே பகுதியில் சுற்றும் சிறுவர்கள்தான் தனது செல்போனை எடுத்ததாக கூறி அங்கிருந்தவர்களிடம் கேட்டார்.
அப்போது அங்கிருந்த அருள் என்பவர் குடிபோைதயில் தகராறு செய்வதாக ராமச்சந்திரனை திட்டி அனுப்பினார். இதனால் அருளை பழிவாங்க நினைத்த ராமச்சந்திரன், சாலையோரம் நிறுத்தி இருந்த அருளின் இருசக்கர வாகனத்தின் மீது ஓலை, வைக்கோலை வைத்து தீ வைத்து எரித்தார். ஆனால் காற்றின் வேகத்தில் அருகில் உள்ள மற்ற வாகனங்களுக்கும், ஓலை குடிசைக்கும் தீ பரவியது விசாரணையில் தெரியவந்தது.
பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு சொந்தமான 2 இருசக்கர வாகனங்களை, வீட்டின் அருகில் உள்ள ஓலை குடிசையில் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு 2 இருசக்கர வாகனங்களும் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த வெங்கடேசன் தீயை அணைத்தார். எனினும் 2 வாகனங்களும் தீயில் எரிந்து நாசமானது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாராவது இருசக்கர வாகனங்களை தீ வைத்து எரித்தார்களா? என்ற கோணத்தில் பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.