< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்

காவிரி ஆற்றில் துலாஸ்நானம்; ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

தினத்தந்தி
|
19 Oct 2023 1:24 AM IST

காவிரி ஆற்றில் துலாஸ்நானம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.

ஜீயபுரம்:

துலாஸ்நானம்

திருச்சி முக்கொம்பு அருகில் உள்ள திருப்பராய்த்துறையில் பசும்பொன் மயிலாம்பிகை உடனுறை தாருகாவனேசுவரர் கோவில் உள்ளது. மிக தொன்மை வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் தேரோட்டமும், ஐப்பசி மாதம் முதல் தேதியன்று தீர்த்தவாரி என்னும் துலாஸ்நானம் நிகழ்ச்சியும் நடைபெறும். துலாஸ்நானத்தின் போது காவிரி ஆற்றில் குளித்தால் பாவங்கள் குறைந்து புண்ணியம் சேரும் என்றும், கங்கை நதியில் குளித்ததற்கு சமம் என்றும் பழங்காலம் தொட்டு கருதப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டு துலாஸ்நானம் நிகழ்ச்சியானது ஐப்பசி முதல் நாளான நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று காலை வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் மற்றும் சோமாஸ்கந்தர் பிரியாவிடை அம்மனும், மற்றொரு வெள்ளி வாகனத்தில் அம்மனும் எழுந்தருளினர். பின்னர் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். அதனை தொடர்ந்து இந்தப் பகுதியில் உள்ள அகண்ட காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளினார்கள்.

புனித நீராடினர்

பின்னர் சிறிய பல்லக்கில் பூஜைகள் செய்து கொண்டு வரப்பட்ட அஸ்திர தேவருக்கு ஆற்றங்கரையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. பின்னர் அஸ்திர தேவர் காவிரி ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு, கும்பத்தில் அபிஷேகம் செய்யப்பட்ட புனிதநீரை ஊற்றிய பின்னர், அஸ்திர தேவர் அகண்ட காவிரி ஆற்றில் புனித நீராடினார்.

அதனைத்தொடர்ந்து காவிரி ஆற்றில் கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் நமசிவாயா..., நமசிவாயா... என்ற கோஷத்துடன் புனித நீராடினார்கள். அஸ்திர தேவர் நீராடிய இடம் காவிரி ஆற்றில் ஆழமான பகுதி என்பதால் தீயணைப்பு துறையினர் ரப்பர் படகில் காவிரி ஆற்றில் சென்று, அங்கு கூடியிருந்த பொதுமக்களை சுற்றி கயிறு கட்டி பாதுகாப்புக்காக நின்றனர்.

பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

காவிரி ஆற்றில் இருந்து புறப்பட்ட அம்மன், கோவில் வளாகத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளி நேற்று மாலை வரை பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பல இடங்களில் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் அறிவுரையின்படி கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தலைமையில் உதவி ஆணையர் லட்சுமணன், ஆய்வாளர் கோகிலா வாணி, நிர்வாக அதிகாரி ராகினி, தக்கார் மேனகா, பணியாளர்கள், கிராம பட்டையதாரர்கள், கிராம மக்கள் ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 100 போலீசார் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்