புதுக்கோட்டை
நாட்டில் காசநோய் பாதிப்பு குறைகிறது
|தடுப்பு நடவடிக்கைகளால் நாட்டில் காசநோய் பாதிப்பு குறைகிறது என புதுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் தனசேகரன் தெரிவித்தார். புதுக்கோட்டை தாரா மருத்துவமனையின் ஆஸ்துமா மற்றும் நெஞ்சக நோய் சிறப்பு டாக்டர் பி.தனசேகரன் கூறியதாவது:-
தடுப்பு நடவடிக்கைகள்
காசநோய் என்பது "மைக்கோ பாக்டீரியம் டுபர்குளே" எனும் பாக்டீரியா கிருமி காற்றின் மூலம் பரவும் கொடிய தொற்றுநோயாகும். பிறந்த குழந்தை முதல் எத்தனை வயது மனிதர்களாக இருந்தாலும் இந்நோய் தாக்கும். காசநோய் கிருமி மனிதர்களுக்கு தலை முடி மற்றும் நகம் தவிர ஏனைய அனைத்து உடல் உறுப்புகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக 80 முதல் 90 சதவீதம் வரை நுரையீரலையும், 10 முதல் 20 சதவீதம் வரை பிற உடல் உறுப்புகளையும் பாதிக்கும். இந்நோயானது காசநோய் பாதித்தவர்கள் இருமும் போது அதில் வெளிப்படும் கிருமி காற்றில் பரவி சுமார் 18 கிலோ மீட்டர் தூரம் வரை பாதிக்கும். இந்நோய் நம்நாட்டில் ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. 1942-ம் ஆண்டுக்கு பிறகு காசநோய் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாலும், கூட்டு மருந்து சிகிச்சையாலும் இந்நோயை குணப்படுத்தும் நிலை வந்தது. 1962-ம் ஆண்டு காசநோய் தடுப்பு திட்டம் தொடங்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் அதிகரிக்கப்பட்டன.
2025-ம் ஆண்டிற்குள்...
இத்திட்டம் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டம் என மாற்றியமைக்கப்பட்டு விரிவுப்படுத்தப்பட்டன. காசநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய சோதனை, சிகிச்சை முறைகள் அரசு மருத்துவமனைகளில் இலவச பரிசோதனை, இலவச சிகிச்சை, மருத்துவ சிகிச்சைக்கான உதவித்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் இத்திட்டத்தினால் நோயாளிகள் பயன்பெற்றதன் மூலம் காசநோய் இன்று ஓரளவு குறைந்துள்ளது. மேலும் இத்திட்டமானது தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க அரசு தரப்பில் திட்டமிட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இந்தியாவில் காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது.
மருத்துவ ஆலோசனை
சளியின் கிருமியில் உள்ள காசநோய் குறைந்ததன் காரணமாக அதி தீவிர மூளை மற்றும் மூளையுறை காய்ச்சல், தண்டுவட காசநோய்கள், நுரையீரல் காற்றுப்பைகள் காசநோய், குழந்தைகளில் அதிகஅளவு காணப்படும் நிணநீர்கட்டி காசநோய் மற்றும் குழந்தை காசநோய் குறைந்துள்ளது.
முறையான மருத்துவ ஆலோசனை, பரிசோதனை, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை உண்ணுதல், உடற்பயிற்சி மேற்கொள்ளுதல், புகை மற்றும் மதுப்பழக்கத்தை தவிர்த்தல் போன்றவற்றால் இந்நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம். இந்த 77-வது சுதந்திர தின விழாவில் "தேசம் முதலில் எப்போதும் முதல்" எனும் அடிப்படையில் காசநோயை முற்றிலும் ஒழிப்போம் என அனைவரும் சபதம் மேற்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.