திருவண்ணாமலை
காசநோய் இல்லா திருவண்ணாமலை விழிப்புணர்வு வாகனம்
|காசநோய் இல்லா திருவண்ணாமலை விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காசநோய் இல்லா திருவண்ணாமலை- 2025 என்ற விழிப்புணர்வு வாகனம் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், காசநோய் இல்லா திருவண்ணாமலை-2025 என்ற இலக்கை அடைய சுகாதார துறை சீரிய முறையில் பல திட்டங்களை செயல்படுத்தி வருவதினால் காசநோயின் பரவலை குறைக்க முடிகிறது. அதற்கு சான்றாக மத்திய அரசால் இந்த ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வெள்ளி விருது வழங்கப்பட்டு உள்ளது.
மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நேரடி கள ஆய்வில் அதிக காசநோயாளர்களை கண்டுபிடித்து குணப்படுத்துதல், மக்களுக்கு காசநோய் பற்றிய விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகப்படுத்துதல், காசநோயால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு நவீன முறையில் ரத்த பரிசோதனை மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளித்தல்,
தனியார் மருத்துவமனைகளில் கண்டுபிடிக்கும் காசநோய் உள்ளவர்களை அரசுக்கு பரிந்துரைத்தலை ஊக்குவித்தல், தனியார் பங்களிப்பின் மூலமாக ஊட்டசத்து குறைபாடுள்ளவர்களுக்கு (காசநோய் பாதிப்பு அடைந்தவர்கள்) ஊட்டசத்து பெட்டகம் வழங்குதல் போன்ற பணிகள் நடைபெறுகிறது என்றார்.
தொடர்ந்து அவர் தனியார் பங்களிப்பின் மூலமாக 30 நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். இதில் துணை இயக்குனர் (காசநோய்) அசோக், ஒருங்கிணைப்பாளர் தேசிய சுகாதார குழுமம் அருண், நலக்கல்வியாளர் சேஷாத்திரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.