டி.டி.எப். வாசனின் யூடியூப் சேனலை முடக்க நோட்டீஸ்
|இளைஞர்களை பாதிப்பதால் டி.டி.எப். வாசனின் யூடியூப் சேனலை முடக்க உத்தரவிட வேண்டும் என்று காவல்துறை சார்பில், கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சென்னை,
காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் விபத்து ஏற்படுத்தி தனக்குத்தானே காயம் ஏற்படுத்தி கொண்ட பிரபல யூடியூபர் டி.டி.எப். வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த செப்டம்பர் 19-ந் தேதி பாலுசெட்டி சத்திரம் போலீசார் டி.டி.எப். வாசனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 4 முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டு இருந்தது. அவரின் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டு இருந்தது. மேலும் அவரின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்தனர். அதனை தொடர்ந்து ஜாமீன் கோரி டி.டி.எப். வாசன் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வாசன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'டி.டி.எப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரால் வாகனம் ஓட்ட முடியாது. 40 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்கிறார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என கேட்டுக்கொண்டார். இதற்கு போலீசார் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படவில்லை.
இதன் காரணமாக டி.டி.எப். வாசனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. மூன்று வாரங்களுக்கு தினமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 3-ந்தேதி டி.டி.எப். வாசன் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.
சிறையில் இருந்து வெளியே வந்த டி.டி.எப். வாசன் தனது யூடியூப் சேனலில் 'நான் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். நான் ஒரு அப்பாவி' என்று பதிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் விபத்தின்போது பைக்கில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
இளைஞர்களை பாதிப்பதால் டி.டி.எப். வாசனின் யூடியூப் சேனலை முடக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று காவல்துறை சார்பில், கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில் காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று டி.டி.எப். வாசனின் யூடியூப் சேனலை முடக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.