< Back
மாநில செய்திகள்
காதலிக்க மறுத்த மாணவியை கழுத்தை     நெரித்துக்கொல்ல முயற்சி         வாலிபர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

காதலிக்க மறுத்த மாணவியை கழுத்தை நெரித்துக்கொல்ல முயற்சி வாலிபர் கைது

தினத்தந்தி
|
2 Sept 2023 12:15 AM IST

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்துக்கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஒரு தலைக்காதல்

விழுப்புரம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயதுடைய மாணவி, விழுப்புரத்தில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இவரை அதே பகுதியைச் சேர்ந்த வேலு மகன் வெற்றிச்செல்வன் (35) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

மாணவி, கல்லூரிக்கு செல்லும்போதும், வரும்போதும் அவரை பின்தொடர்ந்து சென்று தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இருப்பினும் அம்மாணவி, அந்த காதலை ஏற்கவில்லை. இதனால் வெற்றிச்செல்வன் தனது பெற்றோருடன் அம்மாணவி வீட்டுக்கு சென்று பெண் கேட்டுள்ளார். அதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாணவியை கொலை செய்ய முயற்சி

இந்நிலையில் நேற்று காலை மாணவியின் பெற்றோர், வழக்கம்போல் வேலைக்கு சென்றிருந்தனர். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதையறிந்த வெற்றிச்செல்வன், அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கதவை உள்புறமாக தாழ்ப்பால் போட்டுக்கொண்டு அம்மாணவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதில் மாணவி மயக்கம் அடைந்து கீழே விழுந்ததும் அவர் உயிரிழந்ததாக எண்ணி அங்கிருந்து வெற்றிச்செல்வன் தப்பிச்சென்று விட்டார். பின்னர் அக்கம், பக்கத்தினர் அம்மாணவியை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

வாலிபர் கைது

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றிச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்