சென்னை
தங்கப்புைதயல் கிடைத்ததாக ஆசை வார்த்தை கூறி இரும்பு வியாபாரியிடம் போலி நகையை விற்க முயற்சி - 2 பேர் கைது
|தங்கப்புதையல் கிடைத்ததாக ஆசை வார்த்தை கூறி இரும்பு வியாபாரியிடம் போலி நகையை விற்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர் காலடிப்பேட்டை காவேரி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 20). இவர், அதே பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இவரிடம் மர்மநபர்கள் 2 பேர் பழைய இரும்புகளை எடைக்கு போட்டு பணம் வாங்கினர்.அப்போது அவர்கள், தாங்கள் களிமண் எடுக்க சென்றபோது தங்களுக்கு தங்கப்புதையல் கிடைத்ததாகவும், அதை விற்பனை செய்ய வேண்டும் எனவும் பாலமுருகனிடம் ஆசை வார்த்தை கூறினர். அதை நம்பிய பாலமுருகன், அந்த நகையை தானே வாங்கி கொள்வதாக கூறினார்.
அதன்படி நேற்று வில்லிவாக்கம் பாலியம்மன் கோவில் அருகே பாலமுருகனை வரவழைத்த அவர்கள் 2 பேரும், சுமார் 2 கிலோ எடை உள்ள தங்க முத்துமாலையை பாலமுருகனிடம் கொடுத்தனர். ஆனால் அதன் மீது சந்தேகம் அடைந்த பாலமுருகன், இதுபற்றி வில்லிவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் விற்க முயன்றது போலி நகை என்பது தெரியவந்தது.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், போலி நகையை விற்க முயன்ற அம்பத்தூர் நேரு நகர் 4-வது தெருவை சேர்ந்த வீரூ (38), அர்ஜுன்(25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ போலி தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.