தேசியக்கொடியுடன் கச்சத்தீவு செல்ல முயற்சி... கடலில் இறங்கிய இந்து அமைப்பினர் கைது
|இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் தங்களின் கையில் தேசியக்கொடியை பிடித்துக்கொண்டு, அக்னி தீர்த்த கடலில் இறங்கினர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தை சேர்ந்த காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி சிப்பி போஸ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் தேசியக்கொடியுடன் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை பகுதிக்கு நேற்று வந்தனர். இதில் அகில இந்திய இந்து சத்திய சேனா நிறுவன தலைவர் வசந்தகுமார், இந்து மக்கள் நல தலைவர் இளையராஜா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு அவர்கள் அங்கிருந்து கச்சத்தீவுக்கு சென்று தேசியக் கொடியை ஏற்றி வைக்கப்போவதாக தெரிவித்து ஆயத்தமானார்கள். இந்த தகவல் அறிந்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை மறித்தனர். மேலும், கச்சத்தீவுக்கு செல்ல அனுமதி கிடையாது என்றும் தெரிவித்தனர். அதையும் மீறி, இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பலர் தங்களின் கையில் தேசியக் கொடியை பிடித்துக்கொண்டு, அக்னி தீர்த்த கடலில் இறங்கினர்.
அப்போது, இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை மீட்க வேண்டும், தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.