< Back
மாநில செய்திகள்
கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கணவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

தினத்தந்தி
|
6 Dec 2022 7:02 PM IST

கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

குடும்ப தகராறு

திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பிரசன்னகுமாரி. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக குமார் தன் மனைவியை அடிக்கடி அடித்து துன்புறுத்தி உள்ளார். கடந்த மாதம் அவரை தாக்கி கத்தியால் வெட்டியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சம்பவம் குறித்து பிரசன்னகுமாரி திருவாலங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனால் புகாரின் மீது நடவடிக்கை எடுக்கபடவில்லை என கூறப்படுகிறது.

தற்கொலை முயற்சி

பிரசன்னகுமாரி நேற்று திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் தான் மறைத்து கொண்டு வந்த மண்எண்ணெயை எடுத்து தன் உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்கள்.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்