சேலம்
கார் பரிசு விழுந்ததாக பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி - சேலத்தில் பரபரப்பு
|சேலத்தில் ஆன்லைனில் ரூ.400-க்கு சுடிதார் வாங்கிய பெண்ணிடம் ரூ.12½ லட்சம் மதிப்புள்ள கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி பணத்தை பறிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
சேலம்,
சேலத்தில் ஆன்லைனில் ரூ.400-க்கு சுடிதார் வாங்கிய பெண்ணிடம் ரூ.12½ லட்சம் மதிப்புள்ள கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி பணத்தை பறிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
ரூ.400-க்கு சுடிதார்
சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்த ஒரு பெண், தனது செல்போனில் ஆன்லைன் நிறுவன செயலியில் மகளுக்கு ரூ.400-க்கு சுடிதார் ஆர்டர் செய்துள்ளார். பின்னர் சேலம் முகவரியை பதிவு செய்துவிட்டு கேஷ் அண்டு டெலிவரியை கிளிக் செய்தார். இதையடுத்து ஆர்டர் செய்த 5 நாட்கள் கழித்து அந்த பெண்ணின் வீட்டு முகவரிக்கு ஒருவர் மூலம் சுடிதார் டெலிவரி செய்யப்பட்டது.
அதன்பிறகு அந்த ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய ஒருவர், நீங்கள் ரூ.400-க்கு சுடிதார் வாங்கியுள்ளீர்கள். இதற்காக ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள கார் பரிசாக விழுந்திருப்பதாகவும் விரைவில் உங்களுக்கு கார் கிடைத்துவிடும் என்று கூறினார். இதை கேட்டவுன் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், புதிய கார் வேண்டுமா? அல்லது ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் வேணுமா? எனக்கேட்டு அதற்காக ரூ.10 ஆயிரத்து 500-ஐ அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார்.
மோசடி
அதை உண்மை என்று நம்பிய அவர், செல்போன் மூலம் பணத்தை அனுப்பாமல் உறவினர்களிடம் இதுபற்றி விசாரித்தபோது, யாராவது ஏமாற்றி விட போகிறார்கள் என்று அந்த பெண்ணை உஷார் செய்துள்ளனர். அந்த பெண் பணத்தை அனுப்பவில்லை. மறுநாள் மீண்டும் அந்த நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறிய நபர், ரூ.11 ஆயிரம் அனுப்பினால் உடனடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு பரிசு தொகை ரூ.12 லட்சத்து 500 வந்துவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் மோசடியில் ஈடுபடுவதை அறிந்து கொண்ட அந்த பெண், செல்போன் மூலம் பணத்தை எதுவும் அனுப்பவில்லை. ஆன்லைனில் சுடிதார் வாங்கியதால் கார் விழுந்திருப்பதாக கூறி பணத்தை பறிக்க முயன்ற கும்பல் பற்றி தனது உறவினர்களிடம் கூறி அவர்களையும் அந்த பெண் உஷார்படுத்தியதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.