< Back
மாநில செய்திகள்
காவலர்களின் குழந்தைகளுக்கான பள்ளியை மூட துடிப்பதா..? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மாநில செய்திகள்

காவலர்களின் குழந்தைகளுக்கான பள்ளியை மூட துடிப்பதா..? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தினத்தந்தி
|
6 May 2023 12:43 PM IST

அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காவலர் குழந்தைகளுக்கான பள்ளியை திமுக அரசு மூட துடிப்பதா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,

சென்னையை ஒட்டியுள்ள திருப்போரூர் ஒன்றியம், மேலக்கோட்டையூரில் அதிக அளவில் காவலர்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, எனது தலைமையிலான அம்மாவின் அரசு தனியார் பள்ளிகளுக்கு இணையாக உலக அளவிலான கல்வித் தரத்தை வழங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 2017-ஆம் ஆண்டு Police-Public ஒருங்கிணைப்புடன், தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளி ஒன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்கியது.

மேலும், பள்ளிக் கட்டடங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக 51 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து, முதற்கட்டமாக 2018-ஆம் ஆண்டில், 1 முதல் 4-ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கான வகுப்புகள் நடைபெற்றன. முதற்கட்டமாக, வகுப்புகள் நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறையில் இருந்து ஆசிரியர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டனர்.

இப்பள்ளிக்காக கட்டப்பட்ட வகுப்பறைகள் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டு, வரும் கல்வி ஆண்டில் இருந்து ஆங்கில வழியில் நடத்தப்படும் இருபாலர் படிக்கும் பள்ளியாக, 1 முதல் 8-ஆம் வகுப்புவரை முழுமையாக செயல்படத் தகுந்த பொது மற்றும் தனியார் கூட்டமைப்புடன், தனியார் பள்ளிகளுக்கு இணையாக நடத்தப்படும் பள்ளியாக இப்பள்ளியை நடத்துவதற்கு அம்மாவின் அரசு ஆணை பிறப்பித்தது.

அம்மாவின் அரசு கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில், காவலர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று உலகத் தரத்தில் தொடங்கப்பட்ட இப்பள்ளியையும் இன்று மூடுவதற்கு இந்த விடியா அரசு முயல்கிறதோ என்ற சந்தேகம் காவலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏனெனில், சிறந்த கட்டடம், உள்கட்டமைப்புடன் கூடிய இந்தப் பள்ளி வளாகத்தை தாம்பரம் காவல் ஆணையகரத்திற்கு ஒதுக்கீடு செய்து இந்த விடியா அரசு ஆணையிட்டுள்ளது. இந்த ஆணை, காவலர் பெற்றோர்கள் மத்தியில், குறிப்பாக சென்னை, தாம்பரம், மேலக்கோட்டையூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற சென்னைக்கு அருகாமையில் வசிக்கும் காவலர்கள் மத்தியில் இடிபோல் இறங்கியுள்ளது.

அம்மாவின் ஆட்சியில் 2021-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆணையின் அடிப்படையில், ஒரு சிறந்த தனியார் பள்ளியுடன் - குறிப்பாக SBIOA / DAV / PSBB அல்லது ஏதேனும் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்துடன் இந்த விடியா அரசு ஒப்பந்தம் மேற்கொண்டு காவலர்களின் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்கி இருக்கலாம். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளாக இந்த விடியா அரசு காவலர்கள் நலனில் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை.

இந்தச் சூழ்நிலையில், 3.5.2023 அன்று அரசு வெளியிட்டுள்ள ஆணையில், சோழிங்கநல்லூரில் வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகம் இனி மேலக்கோட்டையூரில் காவலர்களின் குழந்தைகளுக்காக கட்டப்பட்ட பள்ளி வளாகத்திற்கு மாற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஏற்கெனவே உள்ள அரசு நிலத்தில் தனியாக ஒரு கட்டடத்தைக் கட்டி மாற்றி இருக்கலாம். அம்மாவின் அரசு காவலர்களின் குழந்தைகளுடைய கல்வி வளர்ச்சிக்காகக் கொண்டுவந்த திட்டம் என்ற ஒரே காரணத்தால் இப்பள்ளி வளாகத்திற்கு தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை மாற்றி இருக்கும் விடியா அரசின் செயலை கடுமையாகக் கண்டிக்கிறேன்.

ஏற்கெனவே, 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அம்மாவின் அரசு வெளியிட்ட ஆணையின் அடிப்படையில், காவலர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்கும் வகையில் Police-Public ஒருங்கிணைப்புடன் புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, காவலர்களின் குழந்தைகளுக்கான பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி தொடர்ந்து நடத்திட இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்