தமிழ்நாட்டின் அனுமதியின்றி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல - எடப்பாடி பழனிச்சாமி
|தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படும் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆந்திர மாநிலத்தில் 33 கிலோமீட்டர்கள் செல்லும் பாலாறு, 222 கிலோமீட்டர் தமிழ்நாட்டில் பாய்ந்து, பின் கடலில் கலக்கிறது. தமிழ்நாட்டின் வடமாவட்டங்கள் பெரிதும் நம்பக்கூடிய நீர் ஆதாரமான பாலாற்றின் குறுக்கே தமிழ்நாட்டின் அனுமதியின்றி தடுப்பணை கட்ட முயல்வது ஏற்புடையதல்ல.
முல்லைப் பெரியாறு, காவிரி-மேகதாது, பாலாறு என தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை மவுனியாக இருந்து தாரைவார்க்கும் திமுக அரசின் முதல்-அமைச்சருக்கு எனது கடும் கண்டனம். பாலாற்றில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு மதிப்பளித்து தடுப்பணை கட்டும் முயற்சியை கைவிடுமாறு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை வலியுறுத்துகிறேன்.
எப்போதும் போலவே கண்டும் காணாதாற்போல் இருந்து மாநில உரிமைகளை தாரைவார்க்காமல். பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படுவதைத் தடுக்க உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.