ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற கனடா பிரதமர் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு - மாற்று விமானமும் திருப்பி விடப்பட்டது...!
|ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற கனடா பிரதமர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
டெல்லி,
டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உச்சிமாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த நிலையில் அன்றும், அதற்கு மறுநாளான நேற்றும் (திங்கட்கிழமை) பல தலைவர்கள் தங்கள் நாட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
அதேவேளை, ஜி20 உச்சிமாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொந்த நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தியா வந்த கனடா பிரதமர் ட்ரூடோ ஜி20 மாநாட்டில் பங்கேற்ற பின் ஞாயிற்றுக்கிழமை மாலை கனடா திரும்ப திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அவர் பயணம் செய்யவிருந்த ஏர்பஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
ஏர்பஸ் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து பிரதமர் ட்ரூடோவை அழைத்துவர கனடா பாதுகாப்பு படை தங்கள் சிசி-150 போலரிஷ் ரக விமானத்தை இந்தியாவிற்கு அனுப்பியது. அதேவேளை, தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ள ஏர்பஸ் விமானத்தின் கோளாறை சரிசெய்யவும் நிபுணர்களை கனடா அரசு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் ட்ரூடோவை அழைத்துவர கனடாவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட சிசி-150 போலரிஷ் ரக விமானம் இன்று அதிகாலை இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது. டிரூடோவை அழைத்து வர டெல்லி புறப்பட்ட விமானம் லண்டனுக்கு திருப்பி விடப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.
அதேவேளை, டெல்லியில் நிறுத்தப்பட்டுள்ள ஏர்பஸ் விமானத்தின் கோளாறு சரிசெய்யப்பட்டால் ட்ரூடோ அதில் பயணிப்பார் அல்லது சிசி-150 போலரிஷ், இந்த இரு விமானங்களிலும் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் ட்ரூடோவை அழைத்து வர ஜெட் விமானம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும் என கனடா பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.