கன்னியாகுமரி
வெள்ளமடம் அருகே நள்ளிரவில் லாரிகள் மோதல்; டிரைவர் பலி
|வெள்ளமடம் அருகே முன்னால் சென்ற லாரி திடீரென நின்றதால் பின்னால் வந்த லாரி மோதியது. இதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
ஆரல்வாய்மொழி:
வெள்ளமடம் அருகே முன்னால் சென்ற லாரி திடீரென நின்றதால் பின்னால் வந்த லாரி மோதியது. இதில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
லாரி டிரைவர்
சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்தநல்லூர், சத்திரப்பட்டி தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது36), லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் இருந்து டாரஸ் லாரியில் குண்டுக்கற்கள் ஏற்றிக்கொண்டு காவல்கிணறு - நாகர்கோவில் 4 வழிசாலை வழியாக களியக்காவிளைக்கு புறப்பட்டார். அதிகாலை 1.30 மணியளவில் வெள்ளமடம் அருகே சுங்கசாவடி பக்கம் வந்த போது முன்னால் மற்றொரு லாரி சென்று கொண்டிருந்தது.
அதனை கேரள மாநிலம் கொட்டாரக்கரை சாந்தியமங்கலத்தை சேர்ந்த சாபு (35) என்பவர் ஓட்டி சென்றார். திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த லாரி பிரேக் போட்டு நின்றதாக கூறப்படுகிறது. இதனால் பின்னால் முருகானந்தம் ஓட்டி வந்த லாரி அதன் பின்பக்கம் பயங்கரமாக மோதியது.
பரிதாப சாவு
இதில் முருகானந்தம் ஓட்டி வந்த லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. முருகானந்தம் இருக்கையிலே இருந்தபடி நசுங்கினார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் விரைந்து வந்து அவரை மீட்க முயன்றனர். ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டதால் அவரை மீட்க முடியவில்லை. சிறிது நேரத்தில் முருகானந்தம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அதிகாரி துரை தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து 2 மணி நேரம் போராடி முருகானந்தத்தின் உடலை மீட்டனர்.
தொடர்ந்து அங்கு வந்த ஆரல்வாய்மொழி போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக முன்னால் சென்ற லாரி டிரைவர் சாபு மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொடரும் விபத்துகள்
ஆரல்வாய்மொழி பகுதியில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சிலநாட்களுக்கு முன்பு நடன கலைஞர்கள் சென்ற கார் அரசு பஸ் மீது ேமாதி 4 பேர் இறந்தனர். இதையடுத்து 4 வழிச்சாலையில் பஸ்சும் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தநிலையில் லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.