கரூர்
ஆன்லைன் அபராதங்களை முறைப்படுத்த வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு
|ஆன்லைன் அபராதங்களை முறைப்படுத்த வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
கரூர் மாவட்ட தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், கனரக வாகனங்களுக்கு ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருகிறது. சாலை ஓரம், பெட்ரோல் விற்பனை நிலையம், பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள், சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களின் பதிவு எண்ணை மட்டுமே குறித்து வைத்துக்கொண்டு என்ன குற்றம் என்று கூறாமல் ஜெனரல் அபன்ஸ் என்று அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும் ஒப்பந்த அடிப்படையில் வட மாநிலங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கும், தமிழகத்தில் அபராதங்கள் விதிக்கப்படுகிறது. இதனால் அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு வாகனத்திற்கான காலாண்டு வரி, தகுதி சான்றிதழ், பர்மிட்டுகள் பெறுவதில் சிரமம் ஏற்பாடுகிறது. எனவே ஆன்லைனில் அபராதங்கள் விதிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் வாகனங்களை நிறுத்தி உரிய ஆவணங்கள் இல்லையென்றால் அபராதம் விதிக்கும் பட்சத்தில் டிரைவர் என்ன குற்றம் செய்தார். டிரைவர் பெயர், அவரது ஓட்டுனர் உரிமத்தின் எண்ணையும் ரசீதில் குறிப்பிட வேண்டும் . எனவே ஆன்லைன் அபராத முறையை மறுபரிசீலினை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.