சென்னை குன்றத்தூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து - சாலையில் சிதறிய கண்ணாடிகள்
|லாரியில் ஏற்றி வந்த கண்ணாடிகள் சாலையில் முழுவதுமாக சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை,
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கண்ணாடிகளை ஏற்றிக் கொண்டு இரண்டு லாரிகள் ஸ்ரீபெரும்பூதூரை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரிகள் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் குன்றத்தூர் அருகே வந்து கொண்டிருந்த போது, ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்திலி சிக்கிய லாரி சர்வீஸ் சாலையில் அப்படியே கவிழ்ந்தது. இதனால் அந்த லாரியில் ஏற்றி வந்த கண்ணாடிகள் சாலையில் முழுவதுமாக சிதறியது. இந்த லாரியை ஓட்டி வந்த நாகராஜ் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாலையில் கவிழ்ந்த லாரியை கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சாலையின் ஒரு பகுதி முழுவதும் கண்ணாடி துண்டுகள் சிதறிக் கிடப்பாதல் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.